விதியின் விடியல்

சிந்திக்கும் திறன் வலுவிழந்துவிட்டது, உன்னை
சந்தித்து நாட்கள் பல நகர்ந்து விட்டதால்,
முந்திக்கொண்டு வரும் கண்ணீர் துளிகளை,
தந்திரமாக மறைக்கின்றேன் யாருமறியாமல்......

மேகத்தினைச் சிலிர்த்திட வைக்கும் மழைத்துளி போல்,
தேகத்தினைச் சிலிர்த்திட வைக்கின்றது உன் நினைவுகள்,
மோகத்தில் அன்று நீ மீட்டிய ராகங்களின் சுகம்,
சோகத்தில் இன்று என்னை மூழ்க வைக்கின்றது....

தொட்டும்...... தொடாமலேயே நீ புரிந்த காதல்,
விட்டும்..... விடாமலேயே என்னைத் தொடர்வதால்,
கட்டுக்கடங்காமலேயே தறிகெட்டு ஓடும் எண்ணங்கள்,
மட்டுப் படாத சோகங்களை மலையாய் குவிக்கின்றன.....

கரைகின்ற விழிகளில் மறைந்திடாத உன்னுருவம்....
விரைகின்ற காலங்களில் விலகிடாத உன்னுருவம்....
அரைகுறையாய் கலைந்த ஒவியமாய் உன்னுருவம்..
புரையோடிய இதயத்தில் நிரந்திரமாய் உன்னுருவம்...

நான் நானாக வாழ்ந்த காலம் முடிந்து....
நான் நமதாக வாழ்ந்த காலம் கரைந்து...
நாம் நானாக பிரிந்த காலம் விடிந்து...
நான் நானாக வாழும் நிலை விதிக்கப்பட்டு விட்டது....!!!

***************************************

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (26-Sep-13, 11:20 pm)
Tanglish : vithiyin vidiyal
பார்வை : 102

மேலே