அரிச்சுவடி அல்ல அகராதி ....!

தொட்டிலில்
அண்ணாந்து பார்த்து
சிரிக்கிறது குழந்தை...!

நாளைய தேச சிற்பியை
அந்நிய மொழியில் பெயர் சூட்டி
ஆசைகளின் முனுமுனுப்பில்
தலைகுனிந்து
தாலாட்டி மகிழ்கிறாள் தாய் ....!

பேய் ... பிசாசு விரட்ட
தமிழில் "ஏடாய்"
தொட்டிலில் தொங்குது அரிச்சுவடி..!

அகராதி அறியா பெற்றோரின்
ஆசைகளோ நிற்காமல்
சுற்றுகிறது
தொட்டிலை சுற்றி சுற்றி ..!

தாயின் ஏக்க பெருமூச்சும்
தந்தையின் பண பெருமூச்சும்
வீடு முழுவதும் நிறைந்திருக்க
தூய சுவாச காற்றுக்காக
ஏங்கி அழுகிறதோ குழந்தை ....?

தத்தி.. தவழ்ந்து ..
விரலும் சுவரும் பிடித்து
எழுந்து நின்று
சுவற்றிலும் கதவிலும்
கிறுக்கி மகிழும் - கீரல் தானே
எழுத்தின் முதல் பிரசவம் ...?

அரிச்சுவடி அறியாத
மழலைகளின்
தொடக்க கல்வியும் இது தானே ..?

உணவு தேடி
எறும்புகளின் ஊர்வலம்.....!
எழுத்துகளின் இலக்கணம் தேடி
ஆரம்ப பாட சாலைக்கு
புத்தக பொதி சுமந்து
பிஞ்சுக்கால்களின் ஊர்வலம்....!

அங்கோ
தமிழின் அரிச்சுவடிகளை
தொலைத்து விட்டு
நுனி நாக்கு ஆங்கிலத்தில்
அகராதி ஆசிரியர்களின் வரவேற்ப்பு ...!

அரிச்சுவடி என்பது
அகர வரிசை எழுத்துகளின்
ஊர்வலம் ....!

அந்நிய மொழியின்
அழைப்பில்
குழந்தைகளின் திருநாமம் ...!

வெள்ளையன் வெளியேறிய
பின்னும்
ஆங்கிலமே ஊர்வலம் நடத்துகிறது
மொழிகளிலும்
வருகைப்பதிவேட்டிலும்...!

அம்மாவுக்கு ஆசை அகராதி
அப்பாவுக்கு பண அகராதி
ஆசிரியருக்கோ ஆங்கில அகராதி
குழந்தைக்கோ விரக்தி அகராதி ...!

அரிச்சுவடி
அறியாத அவதாரங்கள் .....!

மண் குதிரையில் ஏற்றி
குழந்தைகளை எங்கே
ஊர்வலம் அனுப்புகிறீர்கள் ...?

தமிழும் தெரியாமல்
ஆங்கிலமும் புரியாமல்
அலைகிறார்கள்
தேசத்தின் எதிர்க்கால சிற்பிகள் ..!

உளிகளையே ஊனமாக்கி
சிலைகளை
எப்படி செதுக்க போகிறிர்கள் ...?

தமிழின் அரிச்சுவடிகளை
முதலில் பலப்படுதுங்கள்
அன்று தலை நிமிர்வான் தமிழன் ...!

அதோ தொட்டிலில்..
எதிர்கால தேசச்சிற்பி
குழந்தையாய் சிரிக்கிறது .....!

தாலாட்டுங்கள்
தமிழோடு ....!
****************************************************************************
இந்த தலைப்பை கொடுத்து உதவிய தோழி சாந்தி அவர்களுக்கு மிக்க நன்றிகள் ..!
***************************************************************************

எழுதியவர் : வெற்றி நாயகன் (27-Sep-13, 8:37 am)
பார்வை : 186

மேலே