@@@ மன்னவனே வாராயோ @@@

தேங்கணை வீசியென் மனம் பறித்தாய்
தேன்மழையில் பால்நிலவு பருகிட - நம்
தெள்ளமுது காதலால் மதியும் வெட்கமுற்றான்
தெவிட்டா இன்பத்தில் மூழ்கினோம் தினம்தினம்

மணமேடையில் மாங்கல்யம் சூடி மணாளனின்
மனைவியாகி மாதம் முடியவில்லை -சென்றாயே
பிரியாவிடை பெற்று பிரிந்து வெளிநாடு
பிரலாயிக்கும் மனமும் பொய்யாக அனுப்பியது

செவ்விதழ் பெண்ணிவளின் சிந்தை செயலற்றது
செண்டாடியது மனம் சிவந்தகண்களோடு -என்
அன்பான உறவுகள் அன்பை பொழிந்தும்
அன்பாளன் நீஇல்லையென நகரவில்லை நேரமும்

அந்திசாயும் நேரமது அக்கினியாய் எரிகிறது
அந்தரங்கன் உன்அணைப்பிற்கு ஏங்குது - என்
தளிர்உடல் மேனியும் வாடிப்போனது நீயின்றி
தங்கமகள் நானும் உன்வரவை வழிபார்த்தபடி

தனிமையில் வேகும் நம் மனம் இனிமையாக
தலைவனே பணிமுடித்து வந்திடுவாயோ -இங்கு
மடிந்து கொண்டிருக்கும் மங்கையின் மனதில்
மகிழ்ச்சி மலர மன்னவனே வாராயோ!

(தேங்கணை - மலரம்பு ,
பிரலாயிக்கும் - புலம்பும் ,
செண்டாடியது -நிலைகுலைந்தது ,
அந்தரங்கன் - அதிகம் விரும்பப்படுபவன் )

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (27-Sep-13, 11:59 am)
பார்வை : 110

மேலே