கூடல் நகர் அந்தாதி ....!!!

கூடல்நகர் யாதெனில் மீன்கொடி பறந்த
சங்கம்வைத்து தமிழ் வளர்த்த மதுரை .....!!

மதுரை ,மருதத்துறை மருவியே வந்ததாம்
மருதமரங்கள் மிகுந்ததாம் கரையோர வைகை ...!!

வைகையால் வளம் கொழிக்கும் ஊராட்சி
மதுரை அரசாளும் அங்கயற்கண்ணி மீனாட்சி ....!!

மீனாட்சி கொலு வீற்றிருப்பாள் சுந்தரேசரோடு
வலதுபதம் தூக்கியாடும் வெள்ளிசபை ஈசனோடு.!!

ஈசனின் திருவிளையாடல்கள் நடந்ததே இங்கு
வீதிகளே தமிழ்மாதப்பெயராய் இருப்பதே அழகு ...!!

அழகென்றால் திருமலை நாயக்கர்மகால் தூண்கள்
ஒலிஒளி காட்சிக்காண பூக்கும் கண்கள் ....!!

கண்கொள்ளா காட்சி எது என்றால்
முத்திரைப் பதிக்கும் சித்திரைத் திருவிழா ...!!

திருவிழாவில் அழகர்ஆற்றில் இறங்கும் வைபவம்
வையம் போற்றும் அற்புத நிகழ்ச்சியாம் ....!!

நிகழ்ச்சியுள் மங்கலம்கூட்டும் மீனாட்சிகல்யாணம்
ஊரே கொண்டாடிடும் தன்இல்ல விசேஷமாய் ....!!

விசேஷம் நான்மாடக் கூடலில் யாதெனிலோ
ஜில்ஜில் ஜிகிர்தண்டாவும் குண்டு மல்லிகையும் ..!!

மல்லிகையின் வாசத்திலே மனம்மயங்கும்
மதுரைத் தமிழ் கேட்கையிலே மண்மணக்கும் ...!!

மணக்கும் தமிழ் மதுரையாண்ட பெண்ணரசி
ராணி மங்கம்மாவை மறக்குமோ நெஞ்சம் ....!!

நெஞ்சம் நிறைக்கும் தூங்கா நகரம்
தென்பாண்டித் தமிழ் உலவுமிடமே கூடல்நகர் ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Sep-13, 10:09 pm)
பார்வை : 246

மேலே