காணவில்லை அவர்களை
அமைச்சர் அவர்
தான் நின்று
வென்றது போல்
பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது
எங்கே சென்றார்கள்
வீட்டிலிருந்த சொந்தங்களுக்கு
கூட சொல்லாமல்
அவசரமாய் கிளம்பியவர்கள்
பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்
பெற்ற மாணவனாம்
அழகாய் தான் இருக்கிறான்
செய்தி தாளின் முதல் பக்கத்தில்
அவன் கை பிடித்து
அகரம் எழுதச் செய்த
ஆசிரியரை தான் காணவில்லை.
ஏதோ வெற்றி விழாவாம்
அங்கும் தங்கள் முகம் காட்ட
நேரமில்லாமல் தங்கள் பணிகளை
தொடர்ந்தார்கள்
அந்த வெற்றிக்காக
வேலை செய்த
அடிமட்ட ஊழியர்கள்
கட்டி வைத்த கோபுரங்கள்
கொற்றவனின் பெயர் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்க
அந்த கோபுரங்களிடம்
தங்கள் பெயரை சொல்ல நேரமில்லாமல்
மும்மரமாய் என்ன செய்து கொண்டிருந்தார்களோ
அந்த கோபுரங்களை கம்பீரமாய் நிற்கச் செய்தவர்கள்
தேசங்கள் ஆண்ட மன்னவனாம்
அவனுக்கென்று
பக்கங்களையும்
பாடங்களையும்
ஒதுக்கிய வரலாறு
அவனுக்காக போரில் மாண்ட
வீரர்களுக்கென்று ஒரு வார்த்தை கூட ஒதுக்கவில்லை
தேசங்கள் கொண்டாடுகிறது
தலைவர்களை
அந்த தலைவர்களின்
வார்த்தைக்கு உயிர் கொடுக்க
தங்கள் உயிரை தந்த
தொண்டர்களை மறந்து
இப்படியாகத்தான்
சிலரின் பெயர்
பொறிக்கப்பட்டது
பலரின் பெயர்
புதைக்கப்பட்ட இடத்தில்