என் வாசல் தேடி வந்தாய்...!
![](https://eluthu.com/images/loading.gif)
கனவுகள் பலப்பல கவலைகளும் பலப்பல...
விளக்கில் விழுந்த விட்டிலாய்...
விம்மினர் நண்பர்கள் சிலர்...
இல்லறம் காட்டிலும் துறவறம் மேலென...
அறிவுரை கூறினர் அனுபவசாலிகள் சிலர்...
ஐயங்கள் ஆயிரம் அடிமனத்தில் நெருடிட...
அன்னை தந்தையின் ஆயுள் ஆசை நிறைவேற்றிட...
கட்டி வைத்த பலியாடாய்...
குறுக்கும் நெடுக்குமாய் குழப்பத்தில் தலையாட்டினேன்...
என் வாசல் தேடி வந்தாய் நீயும்...
என் வாழ்வில் மனைவியாய் வந்தாய் நீயும்...
உள்மனத்து ஆசைகள் உணர்ந்திட்ட போது...
விழிகள் விரிந்தேன்...
என் சுதந்திரம் பறிக்காத போது வியந்தேன்...
இன்னுமோர் அன்னையாய் மடியேந்திக் கொண்டாய்...
என்னில் பாதியாய் விரல் பற்றி வந்தாய்...
அறுபதும் முப்பதும் தாண்டினால்...
அந்தமாகிவிடும் என்றனர்...
நம் மணவாழ்வின் மனப்பொருத்தம் கண்டு...
ஆற்றாமையில் அண்டைவீட்டார் சிலர் - நாமோ...
அந்தாதியாய் உவகையில்...
மனம் பகிர்ந்து களித்தோம் - நாளை...
காக்கையின் கூடு போலொரு வீடு...
பொன் குஞ்சாய் நம் பிள்ளைகள்...
பேரப்பிள்ளைகள் கொஞ்சிடும் நம் பெற்றோர்...
இவையெல்லாம் ரசித்த பின்...
விரல் பிடித்து நடை பழகிய பிள்ளைகள்...
விருட்சமாய் வளர்ந்திட்ட பின்னே...
சுமையாய் இல்லாமல்...
உன் மடி எனைத் தாங்க...
என் தோள் உனைத் தாங்கிடும் போதே...
நம் உயிர் பிரிந்திட வேண்டும் தோழி...