நான் பார்த்த காதல் கதை

நாயகன், எந்த ஒரு ஆண்மகனும் நேரே நின்று பார்க்க கூட முடியாத அளவு கம்பீரமும்
அவனைப் பார்க்கும் எந்தப் பெண்ணையும் நாணத்தால் தலை குனிய செய்யும் அழகும் பெற்றவனாய் இருந்தான்.

நாயகி,அவளைப் பார்க்கும் யாரையும் வாய் பிளக்கச் செய்யும் அழகை பெற்றவளாய் இருந்தாள்.

அவன்,தூரத்தில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டே இருப்பான்.
இவள் அவனை நோக்கி பாடிக் கொண்டேயிருப்பாள்.

இவள் பாடிக்கொண்டிருந்ததையோ அவன் பார்த்துக்கொண்டிருந்ததையோ யாரும் அறிந்திருக்கவில்லை.

இவர்களில் யாரும்
அவர்களின் காதலை சொல்லவில்லை.
அவனின் காதலை இவளும்,
இவளின் காதலை அவனும்
சொல்லாமல் உணர்ந்து கொண்டார்கள்.

மாலை நேரம்…
இவர்கள் செய்யும் சேட்டைகளை சொல்ல நினைக்கும் போதே
எனக்கு என் காதல் ஞாபகம் வந்து
உள்ளூற ஏதோ செய்கிறது.

ம்ம்ம்ம் .............. ம்..

என்ன செய்வார்கள் என்று கேளுங்கள்.

அவன் தூரமாக நின்று கொண்டு
"உன் பக்க்கத்தில் வரட்ட்டும்ம்மா "
என்று கேட்பது போல்
அவளை ஒரு பார்வை பார்ப்பான்.
இவள் பெண்ணுக்கே உரித்தான நாணத்தை மறந்து தாவிக்கொண்டு அவனை அழைப்பாள்.
இவளின் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு ,
வெட்கம் வந்து அவன் ஒளிந்து கொள்வான்.

பின்,இவளை நோக்கி அவன் மெல்ல மெல்ல நகர்ந்து வருவான்.
இவள், வெட்கம் கொண்டு ஓடுபவள் போல் பாவனை செய்து அதே இடத்தில் நின்று கொண்டிருப்பாள்.
இவளின் பாவனை கண்டு அவன் இடையிடையே நின்று கொள்வான்.

அவளை நெருங்க போவதை நினைத்து வெட்கத்தில் அவன் நிறம் மாறினான்.
அப்போது,அவனின் கம்பீரம் என்னும் ஆடை நழுவி அவன் நிர்வாணமானதை கூட அறியாமல்
தன்னை மறந்து போனான்.

அவன் இவளுக்கு மிக அருகே வந்த சமயத்தில்
தான்
இவள் உண்மையில் வெட்கம் கொண்டவளாய் உடல் சிவந்து போனாள்.

அதன் பின்னர் என்ன நடந்ததோ!!?.
அவன் இவளுக்குள் ஐக்கியமானான்
அதுவரை மட்டுமே நான் அறிந்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து பார்த்த போது
அவனை காணவில்லை
இவள் மட்டுமே இருந்தாள்.
இவளின் தனிமையை போக்க
இவளின் தோழி என்று ஒருத்தி வந்து நின்றாள்.

அவள்!
அழகில் இவளை மிஞ்சியவளாய் இருந்தாள்.
அவள் நமக்கு எட்டாத தூரத்தில் இருந்தாள்.
நம்மைப் போன்றவர்கள் அவளைப் பார்த்து பெருமூச்சு மட்டுமே விட்டுக்கொள்ளலாம்.
அவளிடம் இவள் ,இவளின் காதல் கதையை விடியும் வரை சொல்லிக் கொண்டிருப்பாள்.
விடிந்த பின்பு தான் அவன் வந்து விடுவானே!...
அவன் வந்தவுடன்
அவள்,"நா வரேண்டி "
என்று சொல்லிவிட்டு கிளம்புவது போல் சென்றுவிடுவாள்.
அதுவரை இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இவளின் காதல் கதையை கேட்கும் மயக்கத்தில் தோழியானவள் தேய்ந்து வளர்வாள்.

தோழியுடன் வந்த வாண்டுகள், இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று புரியாமல் கண் சிமிட்டி கேட்டுக்கொண்டிருக்கும்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் வந்து விடுவான் ..
அவன் வருவதற்கும் பொழுது விடிவதற்கும் சரியாக இருக்கும்.
அவன் ஊரில் உள்ளவர்கள் துயில் எழும் முன்னரே வந்து விடுவான்

மற்றவர்கள் துயில் எழும் முன் அவன் வருவதற்கான காரணம் என்னவென்று கேளுங்கள்.

அவன்,இவள் மீது மஞ்சள் பூசி விளையாடுவான்.
இவள் கூச்சத்தில் துள்ளிக்கொண்டு குதிப்பாள்.

பார்ப்பவர்களை ஏக்கம் கொள்ளச் செய்யும் இவர்களின் காதல் லீலைகள்.
ஆனால்,மற்றவர்களைப் பற்றி இவர்கள் கவலை கொண்டதாக தெரியவில்லை.

இது இவர்களின் வாடிக்கையானது.
தினமும் பேசிய கதையையே பேசிக்கொள்வார்கள் ஒரே விளையாட்டை சலிக்காமல் விளையாடுவார்கள்.

இவர்களின் விளையாட்டிற்கு கிடைத்த பரிசாய்
உண்டான கருவை,
வாடகைத் தாய் ஒருத்தியை சுமக்க செய்தான் அவன்.
தன் காதலிக்கு எந்த ஒரு வலியும் கூடாதென்று.

மேகங்களான அந்த கருவை வானம் சுமந்தது.
பிரசவ காலம்
தாயின் நெஞ்சத்தில் படபடப்பு என்னும் புயல் மையம் கொண்டது.
இதையெல்லாம் பார்க்க முடியாத நாயகன் எங்கோ சென்று மறைந்து கொண்டான்.
வலியால் வாடகைத் தாய்
முழங்கினாள் இடியாய்.

இவர்களின் காதலுக்கு பரிசாய் வந்த பிள்ளை, பிறந்தது.
அதற்கு மக்கள் 'மாரி' என்று பெயர் பெயர் சூட்டினர் .
மறைந்திருந்த நம் நாயகன் வெளிப்பட்டான்,
அவன் முகத்தில் மகிழ்ச்சி!
இல்லை.
பெருமிதம்!
அதுவும் இல்லை.
அது என்னவென்று எனக்கு சொல்ல தெரியவில்லை .
அடுத்த முறை மழை பெய்தால்
மழை ஓய்ந்த பின் வெளிப்படும் சூரியனைப் பார்த்து
அது எதனை வெளிப்படுத்தும் பாவனை
என்று சொல்லுங்கள்.

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (5-Oct-13, 12:34 pm)
சேர்த்தது : சுதாகர் கதிரேசன்
பார்வை : 115

மேலே