முதுமை தனிமை கொடுமை

ஒன்றிரண்டு பெற்று
உயிராக வளர்த்தீர்
உயர்கல்வி தந்திட
உடல் நோக உழைத்தீர்

பலநாள் கனவென்று
வெளிநாடு போகிறார்
மேலும் படித்து
மேன்மை வேலை பெற்று

காசு பணத்தோடு
காரும் வீடும் வாங்கி
கனவானாய் வாழக்கண்டு
களிகொள்ளும் உள்ளம்.

கனவு நனவாகும்
கவலைகள் தீர்ந்து போகும்
எஞ்சிய காலம்
இனிதே கழியுமென்று
மிஞ்சுகின்ற நேரமெல்லாம்
மிதப்பிலாடும் மனது.

வெளிநாட்டுக்காசு வர
வாழ்க்கைத்தரம் உயரும்
உற்றம் சுற்றம் காண
உயரும் உம் மதிப்பு.

இப்படியே போகும்
எப்பொழும் வாழ்க்கையென
தப்பாக எண்ணாதீர்
தவிப்புக்குள்ளாகாதீர்.

பரதேசம் சென்றவர்
பணம் காசு கண்டபின்
பகட்டு வாழ்க்கைக்கு
பலியான பின்னர்

உங்கள் உறவை விட
உங்கள் எதிர்பார்ப்பை விட
தங்கள் விருப்பம் போல்
வாழத் தலைப்படலாம்.

எவரையோ மணஞ்செய்ய
எதிர்கொள்வீர் வருத்தம்.
கைவிட்டுப் பிள்ளை போக
கலங்கிடும் உள்ளம்.

வயதான காலத்தில்
மனம் சோரும் நேரத்தில்
கைபிடித்து தோளணைத்து
ஆறுதலாய் பேசிடவும்

அருகில் பிள்ளை வேண்டுமென
உருகிடும் உங்கள் மனம்.
வேண்டிக் கேட்டாலும்
வீழாது அவர் காதில்.

பல காரணஞ்சொல்லி
பலமாய் மறுத்திடுவார்
பல தடவை கேட்டாலோ
பலமாய் வெறுத்திடுவார்

நலமில்லையென்று
நாலு தடவை சொன்னாலும்
பணத்தை அனுப்பிவிட்டு
பதவிசாய் இருந்திடுவார்.

தொலைதூரத்திருந்து கொண்டே
தொலைபேசி கணினி மூலம்
கணக்காய்ப்பேசி பட்ட
கடனைக் கழித்திடுவார்.

பையிலும் பாங்கிலும்
பணங்குவிந்து கிடந்தாலும்
அன்புப்பிள்ளை உம்
அருகில் இல்லையென
மருகிடும் மனது
கருகிடும் இதயம்.

உம் வாழ்க்கைத்துணை
உம்மோடில்லையென்றால்
கசந்திடும் வாழ்க்கை
நசித்திடும் நெஞ்சம்.

உடலுறுதி உள்ளமட்டும்
ஊர் சுற்றி வந்தாலும்
உள்ளம் களிக்காது
உள்மனது ஆறாது.

வயதான காரணத்தால்
வியாதியுஞ்சேருங்கால்
எவரோடும் கூடிவாழ
இயலாமல் போய்விடலாம்.

முதியோர் இல்லஞ்சேர்ந்து
முதுமைப்பருவமெல்லாம்
பழைய கதை பேசி
பகலெல்லாம் போனாலும்

இரவுப் பொழுதெல்லாம்
உறக்கமின்றி உடல்புரள
ஏன் பிறந்தோமென்றெண்ணி
ஏங்கிடுவீர் எப்பொழுதும்.

விதிவசமாய் கொஞ்சம்
புண்ணியம் செய்திருந்தால்
உம் விதி முடியுங்காலை
உம் பிள்ளை அருகிருக்கும்.

இல்லையெனில் இறக்குங்கால்
துயரமும் சுயவெறுப்பும்
பல்கிப் பெருகிட
போகலாம் உம் ஆவி.

இப்படியாய் வாழ்ந்தழியும்
அத்தனைப் பேருக்கும்
இதயங்கசிய எந்தன்
ஆறுதலைத் தந்தேன்.

வெளிநாடு போகும்
பிள்ளைகட்கு எந்தன்
உளமார்ந்த உண்மை
வேண்டுகோள் இதுவே.

எங்கேயிருந்தாலும்
உம் கடமை மறக்காதீர்
உம் வாழ்க்கை வளங்காண
உயிர்கொடுத்துழைத்திட்ட
உமது பெற்றோரை
ஒருநாளும் கைவிடாதீர்.

காசுபணந் தந்திட்டால்
கழியாது உம் கடன்.
அவர்தம் இறுதிக் காலத்தில்
அவரோடிருப்பது உம் கடன்.

அவர் முதுமைக்காலத்தில்
அவர் உம்மோடிருக்கட்டும்
அன்பும் ஆறுதலும்
உம் வழியே கிடைக்கட்டும்.

உம் கைபிடித்தவண்ணம்
அவர் உயிர் போகட்டும்.
உயர்பிள்ளை பெற்றேனென்று
உவப்புடனே போகட்டும்.

இனியும் தனிப்பிணமாய்
எவரும் போக வேண்டாம்
இக்கொடுமை எந்நாட்டிலும்
எப்பொழுதும் வேண்டாம்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (5-Oct-13, 9:03 pm)
பார்வை : 447

மேலே