சேகுவேரா-இன்று நினைவு நாள்
விதையில் இருந்து
விருட்சம் வருவது
இயற்கை....
ஆனால்,
விருட்சமொன்றையே
விதையாய்
விதைத்தவனின்
நினைவு நாள் இன்று....
ஏகதிபத்தியம்
ஆர தழுவி தழுவி
துருபிடித்து போன,
துப்பாக்கியொன்று,
தன் பாவங்களை கழுவிகொண்டது,
அந்த மாமனிதனின் குருதியில்....
சொர்கத்தின் வாசல்
ஏகாதிபத்தியத்தில் முடிந்தால்,
சரித்திரத்தின் வாசல்
உன் வீட்டு கதவிடுக்கில் காத்துகிடக்கும்
என்று உரக்க சொல்லுகிற சக்தி என்னிடமுண்டு,
காரணம் நான் உன் தோழன்...
பல ஏழைகளின்
வீட்டு அடுப்பில்,
உறங்கிக்கொண்டிருந்த பூனைகளை,
துரத்தி விட்டு,
நெருப்பை அல்லவா
அள்ளிப்போட்டதுன் வார்த்தைகள்....
எண்ணெய்,
அடிமைகள்,
டாலர்,
இவைகளை விட
அமெரிக்காவால்
அதிகம் தேடப்பட்டவன்
நீதான்....
உலகிலுள்ள அநீதிகளை
தேடிச்சென்று வேரறுக்கும்
உன்னை தேடி பிடிப்பது
சத்தியமா?...
புரட்சியின் உதடுகள்
பல மொழிகளில்
பேசியதுண்டு,
மார்டின் லூதர் கிங்,
நேதாஜி,
லெனின்,
ஸ்டாலின் இப்படி.,
ஆனால்,
அதற்கு தெரிந்த
ஒரே தாய்மொழி
நீதான் "சேகுவேரா"....
சரித்திரம் பல புரட்சிகளை பார்த்ததுண்டு,
தன் மொழி,
தன் தேசம்,
தன் நிறம்,
இப்படி புரட்சிகளிலும் சுயநலமுண்டு,
ஆனால்,
இந்த மண்ணில்
மனிதத்திற்காக,
புரட்சி செய்த
ஒரே மாமனிதன் நீதானடா....
உனக்கு திரிசங்கு சொர்க்கம்
செய்கிற திராணி இருந்திருந்தால்,
அதை
ஒரு ஏழையின் வீட்டு
அடுப்புள்ளே பூட்டியிருப்பாய்....
பெரும்பாலும்,
புரட்சியின் மேலுதடு
அடிபட்டு பிளந்தே கிடக்கும்,
ஆனால்,
அதற்கு புன்னகைக்க தெரியுமென்ற ரகசியம்
உன்னால் கசிந்தது.....
ஆண்மையின் வீரம்
குறியினன்று,
அது
மண்டியிடாத முதுகெலும்பில் உண்டென்று
உணர்த்திய மரணமல்லவா
உன்னுடையது......