தமிழின் இனிமை

தமிழின் இனிமை

மலையில் தோன்றி கலையில் வளர்ந்த மாத்தமிழ்
மூத்த தொன்மையால் மூவேந்தர் காத்த மூத்தமிழ்
சங்கம் வைத்து அங்கம் பெருக்கிக்கொண்ட தங்கத்தமிழ்
இயல் இசை நாடகமென முப்பொழுதும் வளர்ந்த முத்தமிழ்
மொழி என்பதன் இலக்கணமாய் விளங்கும் தொல்தமிழ்
பூத்த இளமையால் பூலோகம் போற்றிய பூந்தமிழ்
வாய்த்த வளமையால் வரலாறு வாழ்த்தும் வண்டமிழ்
சேர்த்த செம்மையால் செம்மொழி ஆன செந்தமிழ்
ஈர்த்த இனிமையால் இயல்தோறும் வளரும் இன்றமிழ்
பெற்ற பெருமையால் வெளிநாட்டோர் வணங்கிய நற்றமிழ்
உற்ற தாய்மையால் பல மொழிகள் ஈன்ற தாய்த்தமிழ்
நாட்டிய வாய்மையால் வளியெல்லாம் நிறைத்த தென்றமிழ்
உதட்டசைவே உயிரெழுத்தான உயர்தமிழ்
பொருளுக்கு இலக்கணம் கண்ட பெருந்தமிழ்
ஈரராயிரம் வருட இலக்கியங்கள் நூறாயிரம் கொண்ட பழந்தமிழ்
வள்ளுவன் குறளால் வானருள் வாங்கிய வரத்தமிழ்
காப்பியங்கள் மூலம் கதைகள் பல கூறிய கவின்தமிழ்
கம்பன் காவியத்தால் கவிதைமழை பெய்யும் கவித்தமிழ்
அகமென்று பிரித்து சுகமெல்லாம் காட்டிய காதல்தமிழ்
புறமென்று பிரித்து திறமெல்லாம் கூறிய வீரத்தமிழ்
கவிதைகள் மூலம் கடவுள்கள் உயிர்பெற்ற கலைத்தமிழ்
கவிஞர்கள் பலரை கடவுள்களாக்கிய தெய்வததமிழ்
கடல்கொண்ட போதும் உடலுதறி உயிர்வளர்த்த உயிர்த்தமிழ்
யுத்தம் பல வந்தும் ரத்தமும் சித்தமும் கெடா சுத்தத்தமிழ்
பேசும்போது இதழெல்லாம் இதமாகும் இசைத்தமிழ்
கேட்கும்போதெல்லாம் காதோரம் தேனூறும் தீந்தமிழ்
காய்ப்பு பல கண்டும் மூப்பெய்தா கன்னித்தமிழ்
எவ்விடம் சென்றாலும் மகுடம் சூடும் மானத்தமிழ்
இமயத்தில் மட்டுமல்ல இணையத்திலும் கொடிநாட்டிய கொற்றமிழ்
யுகம் பல கடந்து தாகம் தீரா முகநூலில் வாழும் புதுத்தமிழ்

எழுதியவர் : sujithtamizhan (10-Oct-13, 12:50 pm)
பார்வை : 294

மேலே