தமிழே துணை

தமிழே துணை

மூடமே வேடமாய்க்கொண்ட
ஓராயிரம் கடவுள்களில்
ஒரு கடவுளையும் நமபாததால்
தன்னைத்தான் நொந்து கொண்டு
என்னைத்தன் சொந்தமாக்கிக் கொண்டு
இன்னருள் வாய்த்தருள
மண்ணிலும் விண்ணிலும் கடவுளில்லையெனக்கு

அன்பு கூடி வாழ
பண்பு சூடி பழக
அறிவு தேடி ஆள
அகலாய் ஒளியூட்டி
நகலாய் வாழ்ந்துகாட்ட
தாய்மை கொண்ட பெற்றோரில்லையெனக்கு

நல்லது போற்றவும் அல்லது தூற்றவும்
பண்ணது மீட்டவும் பொன்னது ஈட்டவும்
மண்ணது புதுக்கவும் புண்ணது ஒதுக்கவும்
வானது ஏறவும் மீனது மீறவும் கற்றுத்தர
மானமும் அறிவும் அழகாய்க் கொண்ட
மாண்புடை சான்றோர் ஒருவருமில்லையெனக்கு


சிரமம் பல வந்தபோதும்
கருமம் போகிறதென்று
உரிமையாய் கோபம்காட்டி
உண்மையாய் சோகம்போக்கி
மென்மையாய் உறவுகொண்டு
கண் மையாய் காத்துதவ உறவினருமில்லையெனக்கு

என் வழிகளில் நோக்கமாகவும்
என் வலிகளில் ஊக்கமாகவும்
என் வெற்றிகளுக்கு சூடமாகவும்
என் தோல்விகளுக்கு பாடமாகவும்
என் சிரிப்புப் பேச்சுக்கு ஏங்கவும்
என் மரிப்பு மூச்சை தாங்கவும்
என் கைக்கு முன்னொரு கையாகவும்
என் தோளுக்கு பின்னொரு தோளாகவும்
என் தோழமை மனதிற்கேற்ப தோழனில்லையெனக்கு

என் கனவுகளுக்கு கருத்துக்கள் கூறவும்
என் கதைகளுக்கு திருத்தம் சொல்லவும்
என் கவிதைகளுக்கு உருக்கம் கொள்ளவும்
என் கண்ணீருக்கு மருத்துவம் பார்க்கவும்
என் களைப்புக்கு புத்துணர்வு ஊட்டவும்
என் கைகோர்த்து கால் நடை நடக்கவும்
எனக்கே எனக்கென்று நட்பை பொழியும் தோழியில்லையெனக்கு

என் கழுத்துக்கு மாலையாகவும்
என் கவிதைக்கு சோலையாகவும்
என் கனவிலும் நினைவிலும் பாதியாகவும்
என் மலர்விலும் தளர்விலும் மீதியாகவும்
என் முத்தங்களில் சுயம் மறக்கவும்
என் யுத்தங்களில் பயம் மறைக்கவும்
என் பார்வையில் ஊடல் துள்ளவும்
என் போர்வையில் கூடல் கொள்ளவும்
நான் சாய்ந்து விடும் வேளைகளில் மார்பாகவும்
நான் ஓய்ந்து விடும் நாளைகளில் மடியாகவும்
மெய்மயக்கம் தீர்ந்த பின்னும்
கையிருக்கம் குறையாமல்
வாய்மையால் வாழ்வு நடத்தக் காதலுமில்லையெனக்கு

இத்தனையும் இவ்வாறிருக்க
எத்துணையும் இல்லா என்னை
நற்துணையாய் கொண்டாயென் நற்றமிழே...
உன்னையூற்றியே என் வெறுமை நிரப்புகிறேன்
உன்னையேந்தியே என் இருளை விரட்டுகிறேன்
என் சித்தத்திலும் ரத்தத்திலும்
பித்தமென கலந்துவிட்ட
முத்தமிழே என் தாய்த்தமிழே
நீயே என் வாழ்வின் உயித்துணை ...
நீ இருப்பதாலேயே நான் உயர்திணை..

எழுதியவர் : சுஜித்தமிழன் (10-Oct-13, 5:07 pm)
பார்வை : 77

மேலே