இதுவொன்றும் புதிதல்ல

மனிதமின்றி மிதியுங்கள்
சருகென்று விளியுங்கள்
மலமென்று உரையுங்கள்
சருகையும்,மலத்தையும்
அதிசக்தி கொண்ட எருவாக்கி
உயிர்த்தெழுவேன் நான்....!

பின்னிருந்து குத்துங்கள்
எதிரிக்கு எதிரி நண்பனாகி
கூடை தணலைக் கொட்டுங்கள்
அக்கினியின் உக்கிரத்தில்
சாம்பலாய்ப் போனாலும்
உயிர்த்தெழுவேன் நான்.....!

எழுதும் வரிகளை
மனச்சாட்சியைத் தொலைத்து
வாந்தியென்று உரையுங்கள்
வம்புக்கிழுத்து வசையுங்கள்
உங்கள் வசைகளில்
வாழ்த்துப்பா காண்பேன் நான்..!

எரியும் தீயில் எண்ணெயாய்
கருத்துக்களில் அமிலம் பொழியுங்கள்
தேர்வெனும் ஆயுதத்தால்
எட்டிக் கீழே உதையுங்கள்
சுவரில் எறிந்த பந்தாய்
திரும்ப வருவேன் நான்.....!

இதிகாசம் படைக்க வரவில்லை
உம்முன்னே நான்.........
நீங்கள் குடித்து வளர்ந்த
அதே தமிழ்ப்பால் குடித்து
பரிகாசமின்றிப் படைப்பளிக்க
தன்னம்பிக்கைத் தேரேறி
வந்த மங்கையவள் நான்...!

பெண்மையை மிதித்து
தாய்மையைப் பழித்து
சரித்திரத்தில் சாதனைபடைத்து
எதைக் காணப் போகிறீர் ....!
சிற்பங்களைச் செதுக்குவதாய்
சிலைகளை உடைப்பதை (இனியும்)
வேடிக்கை பார்க்க முடியாது..!

நடுக்கடலில் தள்ளிவிட்டாலும்
நானறிந்த நீச்சலில்
கரை வந்தடைவேன் நான்......!
இது செருக்கல்ல தன்னம்பிக்கை.!!
------------------------------------------------------------------
தோழி துர்க்கா

(இது எனது தன்னம்பிக்கை மட்டுமல்ல தன்னம்பிக்கை தேவைப்படும் சக நட்புக்களுக்கும் )

எழுதியவர் : தோழி துர்க்கா (10-Oct-13, 5:45 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 271

மேலே