ஞாபகங்கள் வடித்தக் கவிதை! (மெய்யன் நடராஜ்)
வங்கக் கடல்விட்டு குடியேறி வசிக்கின்ற
==வசந்தக் கடலென்று நம்பிஇரு கருமீன்கள்
தங்க வந்திருக்கும் தனித்துவமே நயனமென்று
==தக்க ஆதாரம் தாங்கியதைக் கண்டதுமே
அங்கே மீனாகி அடைக்கலமாய் புகுந்துவிட
==அகதி எனமாற்றம் கொண்டிடலாம் எனத்தோன்றும்
திங்கள் முகவதனம் தெவிட்டாத கள்வடித்துத்
==திருட்டுத் தனமாகக் குடிஎன்றே சொல்கிறதே!
தங்கக் குடமிரண்டுத் தலைகீழாய்க் கவிழ்ந்திருக்க
==தாங்கி அதைபிடித்த வாழையென இருகால்கள்
சங்கத் தமிழ்கண்ட சரித்திரத்துப் பெண்மணிகள்
==சாயல் நடைபோன்று தள்ளாடும் பின்னழகில்
தொங்கும் கூந்தலெனும் கருஊஞ்சல் காற்றசைவில்
==தொட்டு விளையாடும் பேரழகில் ஆசையினால்
எங்கும் சிறகடிக்கும் இதயமெனும் பூம்பறவை
==ஏங்கித் தவங்கிடக்கும் ஏந்திழையாள் முகம்காண!
நங்கூ ரமிட்டப் போர்க்கப்பல் ஏவுகணை
==நங்கை நூலிடைமேல் நாசூக்காய் அமர்ந்திருக்கும்
சிங்கா ரக்கோலம் சிந்துகின்ற அதிசயத்தை
==சிந்தை மேடையிலே செங்கம்பள வரவேற்பு
பங்கம் விளையாமல் பக்குவமாய் செய்திடவே
==பருவ ராகங்கள் பகலிரவாய் இசைப்பவளின்
பொங்கும் நினைவலைகள் பொழிகின்ற ஞாபகங்கள்
==புதையல் போல்தங்கி புதுக்கவிதை வடிக்கிறதே!