+உள்ளது உள்ளபடி..!+ (அ வேளாங்கண்ணி)

அவனொரு பைத்தியக்காரன். பிழைக்க தெரியாதவன். வாழத்தெரியாதவன். விவரங்கெட்டவன். முன்னேறத்தெரியாதவன். எதற்குமே லாயக்கில்லாதவன்.

அவனது ஒரே குற்றம் எப்போதுமே உண்மையை மட்டுமே பேசுவான். அதனால் அவனுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. எதற்கும் கை நீட்ட மாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று தன் நேர்மையான வழியில் நாளும் நடப்பவன். நல்லவன். உலகமே கெட்டுப்போன பின்பு நல்லவர்கள் எல்லோருமே மற்றவர்களுக்கு இப்படித்தானோ...!

அவனோடு இருந்த, வேலை பார்த்த ஒவ்வொருவரும், அவர்களது வாழ்க்கையில், பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, இவன் மட்டும் அதே நிலையில் தொடர்ந்தான். மிகவும் சந்தோஷமாக இருந்தான். எதற்கும் யாருக்கும் எப்போதும் பயப்பட மாட்டான்.

இவனும் ஒரு நாள் விழுந்தான் காதலில்.. காதலில் விழுந்தவன் அவளையே கல்யாணமும் முடித்தான்.

அவளும் அப்படியே.. அவனுக்கேற்ற மாதிரி...

இவர்களது வாழ்க்கையில் எல்லாமே இருந்தது..
அன்பு, பாசம், சிரிப்பு, மகிழ்ச்சி, குதூகலம் என என்னென்ன நன்மை பயப்பவை உலகில் எத்தனை உண்டோ அத்தனையும் இருந்தன.. ஒன்றே ஒன்றைத்தவிர.. அந்த ஒன்று பணம்... அதுவும் இருந்தது.. தேவைக்கு மட்டும்..

அதற்காக இருவருமே வருத்தப்பட்டதில்லை. கவலைப்பட்டதில்லை. இத்தனை நல்லவை இருக்கும் போது அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டாக படவில்லை.

அழகான இந்த ஜோடி இன்பம் குதூகலிக்க தங்கள் வாழ்க்கை ராகத்தை இன்னிசையாக மீட்டினர்.


பின்குறிப்பு: இந்த கதையில் எந்தவித திடீர் திருப்பங்களோ, அதிர்ச்சி தரும் முடிவுகளோ இல்லை. அதை எதிர்பார்த்து வந்தவர்கள் என்னை மன்னிக்கவும்.
உள்ளதை உள்ளபடி சொல்ல நினைத்தேன். அதுதான் இப்படி. நன்றி.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Oct-13, 7:08 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 140

மேலே