விடியலே இல்லாத நாட்கள்!!!.....

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இத்துப்போன நிலையில்தொங்கிக் கொண்தடிருக்கும் வீட்டுக் கூரையின் ஓலைகள்,தோரணங்களாய்த் காட்சியளிக்கும் கூரையின் ஈர்க்குகள், இதற்கிடையில்"அத்தி பூத்தால் போல்" காணப்படும் ஓடுகள் அவைகளும் நிரந்தரமில்லை இன்றோ நாளையோ என்று நாட்களை எண்ணியபடி...வீ ட்டுக் கூரையில் இருக்கின்ற துவாரங்கள் தான் வீட்டு வெளிச்சம் போலும்.ஏன் இரவா பகலா என்று தெரியப்படுத்தும் சமிஞ்சை குறியும் அது தானோ???? வீட்டு முற்றத்தில் கொட்டப்பட்டிருக்கும் சருகுகளுக்கிடையே வரும் அந்தச் சத்தம் சிவாவின் வீட்டுக் கஷ்ரத்தையும் அவர்களின் மனதில் தேங்கியிருக்கும் ஆசை உணர்ச்சிகளையும் கடைசியில் அவை அனைத்தும் கனவாயும் மனதுக்குக் கனமாயும் மட்டுமே போனதையும் இதமாகச் சொல்வதாய் உந்தும் அப்படியொரு சத்தம்.ஓடி விளையாடும் பருவம் தான் சிவாக்கு இன்னும். ஆனாலும் தான் படும் கஷ்ரம் போதாதென்று தனக்கு உடன்பிறப்பாகக் கடவுள் கொடுத்த தங்கை ராஜியையும் நினைத்து அவன் வேதனைப்படாத நாட்களே இருந்ததில்லை. அவனின் தாயின் சேலைகளின் கிழிசல்கள் கூட அவர்களின் கஷ்ரத்தைக் கூறி நிற்கும் வரலாற்று நூல்... மீனவக் குடும்பம் என்பதாலோ என்னவோ "கரையை வந்து முத்தமிட்டுச் செல்லும் அலையைப் போல்"இவர்கள் வாழ்க்கையிலும் கஷ்ரங்கள், பசி, பட்டினி எல்லாமே பழகிப்போன ஒன்று. சந்தோஷம் என்று நினைத்துப் பார்க்கவே எதுவும் இருந்ததில்லை அவர்கள் வாழ்க்கையில்.
தங்களது வாழ்க்கையில் சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்கள் சிவாவும் ராஜியும்.இவர்களின் கதையை எழுத ஆரம்பித்தாலே என் பேனா முனைகூட அழுகின்றது எழுதுவதென்ற பெயரில். "வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல்" கஷ்ராத்துடன் காலத்தைக் கழித்து வரும் நிலையில் தன் கணவனை இழந்த செல்லம்மாவின் துயரம் கோடியாய்ப் படர்ந்தது.இந்த நிலையிலும் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்தெடுக்க அவள் பட்ட கஷ்ரம் கொஞ்சமல்ல ஒரே வார்த்தையில் சொல்லி முடிப்பதற்கு. அவர்களின் கஷ்ரத்தை நினைத்தா கருகி நிற்கின்றன அவர்கள் முற்றத்து மரங்களும்! இல்லாமல் இருக்குமா கற்களும் கண்ணிர் வடிக்கும் அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளைத் திரும்பிப் பார்த்தல். அவ்வளவு துரம் வேதனைகள் மலையைப் போல் சூழ்ந்து கொண்டதைக் காலங்களும் மறந்ததில்லை இன்றுவரை. இவர்கள் விஷயத்தில் மட்டும் சந்தோஷங்கள் காலாவதியாகிப் போய் விட்டதா என்ன?
வீட்டுக் கூரைகலுக்கிடையில் வந்த நிலாவின் வெளிச்சத்தையும், வீதியில் தொங்க விடப்பட்டிருக்கும் மின் வெளிச்சத்தையும் வாடகைக்கு வாங்கிப் பிள்ளைகள் படித்த வரலாற்றைக் காலங்கள் அழகாய்ப் பதிவு செய்தன கண்ணீரினால். வயிற்றுப் பசியைப் போக்க தன்னிரு பிள்ளைகளுடன் படும் கஷ்ரத்தை நினைக்கையில் மனமோ எரிமலையாய் வெடித்தது செல்லம்மாவுக்கு. பசியால் துடிக்கும் போதெல்லாம் குழாய் நீரினால் வயிற்றை நிரப்பிய காலங்கள் தான் அதிகம். அவர்களின் வேதனைக்குச் சாட்சி வீடும், அங்கே நிற்கும் மரம் செடி கொடிகளும், இனித் தைக்கவே முடியாமல் தையல்களைச் சுமையாய்ச் சுமந்து நிற்கும் அவர்கள் ஆடைகளும் தான். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விடப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் பொருந்தும். விடியும் பொழுதெல்லாம் இவர்கள் துக்கத்திலும் வேதனையிலும் குளிர்காய்கிறதா? அந்தத் தென்றல் தங்களை வருடிச் செல்லும்போது இதாவது நம்மை நலம் விசாரித்துச் செல்கிறதே என்று தனக்குள்ளே மெச்சிக்கொண்டாள் செல்லம்மா.
இப்படி எத்தனை கஷ்ரங்கள் வந்தாலும் தன் பிள்ளைகள் இருவரையும் படிக்க வைக்க மறந்ததில்லை அவள். என்றும் போலவே பிள்ளைகளைப் பாடசாலைக்குத் தயார் படுத்தும் வேலைகளில் ஆரவாரப்படுகிறாள் செல்லம்மா. வேலைகளையும் கவனித்த படியே "சிவா, ராஜி பாடசாலைக்குச் செல்ல நேரமாகிவிட்டது இன்னுமா தூக்கம்" என்று கூப்பிட்ட படியே அறைக்குள் நுழைகிறாள். ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். ஆனால் சிவாவோ அழுதபடியே படுத்திருக்கிறான். "சிவா....."மறுபடியும் தாயின் சத்தம். "இதோ வாறன் அம்மா" என்றபடியே போனான் தாயிடம். "சிவா நீ இன்னும் பாடசாலைக்கு தயாராகவில்லையா?" என்று கேட்டபடியே அவனை நெருங்கினாள் தாய் செல்லம்மா. பதிலே பேசாமல் நின்றான் சிவா. "உன்னைத் தான் ஏன் பேசாமல் இருக்கிறாய்?" என்று மறுபடியும் கேட்டாள் செல்லம்மா.அவனோ விம்மி விம்மி அழத் தொடங்கினான். திடீரென்று அவன் அழுவதைக் கண்ட செல்லம்மாவால் தாங்க முடியாமல் செய்வதறியாது துடித்துப் போய் அவனை அணைத்த படியே "என்ன ஆச்சு உனக்கு நான் என்ன கேட்டன்?" என்று கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடுக்கத் தொடங்கினாள். "நான் போட்டுக் கொண்டு போற உடுப்பைப் பார்த்து பாடசாலையில் பகிடி பண்ணுறாங்க இனித் தைக்க இடமில்லையா என்று என்னை எல்லார் முன்னாடியும் வேதனப்படுத்துறாங்க நான் இனிப் போகல அம்மா"என்றான் சிவா. "காசு வரும் போது வாங்கித் தருவன் தானே அதுக்கு இப்படியா பேசுறது நல்லாப் படிக்கணும் படிக்கப் போகமாட்டன் என்டு சொல்லக் கூடாது யாரும் எதும் சொல்லட்டும் நீ காதில வாங்காத."என்றாள் செல்லம்மா."எப்ப காசு வரும் எப்ப வாங்கித் தருவீங்க அம்மா?"இப்படியே அவனும் விடாமல் கேட்டான். மீண்டும் அவனைத் தழுவியபடியே "எப்ப இல்ல ராசா காலம் வரும் எல்லாமே மாறும் காலத்துக்கேற்ற மாதிரி நாமும் வாழப் பழக வேண்டும் தானே"என்றாள். "அந்தக் காலம் எப்ப வரும் அதுவும் நமக்கா?" என்று அழுகையுடனும் சற்றுக் கேலியுடனும் கேட்டான் சிவா. செல்லம்மாவின் இதயமோ இதைக் கேட்டவுடன் நெருப்பில் தீக்குளிக்கும் விறகாய்ப்
போனது.
மீள முடியாத கஷ்ரம் என்று அவள் மனம் அறிந்திருந்தாலும் ஏதோ மனதின் ஒரு ஓரத்தில் நம்பிக்கையும் இருக்கத்தான் செய்தது. "சரி கொஞ்சம் பொறுமையா இரு வார மாதம் வாங்கித் தாரன்"என்றாள் செல்லம்மா. "போங்கம்மா இப்படி எத்தனை தடவை சொல்லியிட்டிங்க ஆனா வாங்கித் தந்த பாடில்ல எனக்கும் நிலைமை விளங்குது ஆனா நானும் என்ன செய்ய?"தேம்பித் தேம்பி அழுதான் சிவா. அவன் அழுவது தாங்க முடியாது செல்லம்மா அழத் தொடங்கினாள். இதைக் கண்ட சிவாவும் ராஜியும் சேலைத் ததலைப்பால் தாயின் கண் ங்களை அழுதபடியே துடைத்தார்கள். "நான் இருக்கிறன் அம்மா வளந்த பிறகு நான் குடும்பத்தைப் பாப்பன் தானே அழவேண்டாம் நான் தெரியாம கேட்டுட்டன் இனி இப்பிடி எதுவும் பேச மாட்டன்" என்று சொல்லித் தாய்க்கே தாயாய் மாறுகிறான் சிவா. இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் பிள்ளைகள் ஆசைப்படும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணம் சொல்லிச் சமாளிப்பதே பெரிய வேலை தான் செல்லம்மாவுக்கு.கடந்து வந்த பாதைகளில் பயணத்தைக் கண்டதை விட வெறுமனே முட்களையும், மேடு பள்ளங்களையுமே பார்த்திருக்கிரார்கள் இதுவரையிலும். இவர்கள் இதயம் வேதனைகள் தேங்கிக் கிடக்கும் புதைகுழிகள் என்று தான் சொல்ல வேண்டும். காலப்போக்கில் கண்ணீருக்குக் கூடப் பஞ்சம் வந்துவிடும் போல இவர்கள் விஷயத்தில் தினமும் அழுவதால். பசுமை நிறைந்த வாழ்வு இவர்களுக்கு மட்டும் பகல் கனவா? இத்தனை வேதனைகளையும் தாண்டி வந்த இவர்கள் சாதனைப் பட்டியலில் இடம் பிடிக்காமல் போனது உலகம் கண்ட பாரிய வரலாற்றுத் தோல்வி.
முடிவே இல்லாத தொடர்கதை தான் இவர்களின் வேதனை. விடியல் என்னும் பெயருடன் மட்டும் தான் விடிகிறது விடியல்களும். நாட்களும் வேகமாகவே ஓடுகிறது நேரங்களும் கண் சிமிட்டும் நொடியில் வேகமாய்ப் போகிறது ஆனால் செல்லம்மாவின் குடும்ப நிலை மாத்திரம் அதே நிலையில் தான் இருக்கிறது.தொடக்கம் இருந்தால் ஒரு முடிவும் இருக்கத்தானே வேண்டும் எனத் தன்னை தானே தேற்றுவாள் செல்லம்மா.ஏன் எத்தனை பிரச்சினைகள் வாழ்விலே எங்களை மட்டும் முட்டி மோதிப் பார்க்கின்றன? என்று அழுதாலும் பலன் கிடைக்கவா போகிறது என வேதனைப்பட்ட காலங்கள் காலத்தாலும் அழியாதவை. எனவே இந்தச் செல்லம்மாவின் நிலை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ செல்லம்மாக்களதும் நிலைமை நீரில் எழுதிய எழுத்தாய்த் தடம் பதித்து விட்டன விடியாத விடியல்களுடன் இந்த உலகில்.
உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம் !!!!!!!!!!!