பாளையத்தம்மா ....பெரிய பாளயத்தம்மா.......!!

ஆரணி ஆற்றின் கரையோரம்
ரேணுகா தேவியே பவானியாக
பூரணமாய் அருள் ஆசிதரும்
ஆலயமே பெரிய பாளையமாம் .....!!
சுயம்புவாய் அம்மன் முன்னிருக்க
சுதையில் சிலையாய் பின்னிருக்க
பஞ்சதலைநாகம் குடை கவிழ்க்க
அஞ்சேலெனவே அபயம் அளிப்பாள் ...!!
முன்புறக்கையில் கபாலம் கொண்டாள்- அதில்
முப்பெருந்தேவியர் வாசம் கொண்டார்
சங்குசக்ர தாரிணியாய் வாளுடன்
அமுதக்கலசமும் ஏந்தி நின்றாள் .....!!
ஆங்காரம் கொண்டோரை வதம்செய்யும்
ஓங்கார வடிவம் ஆனவளே ...!
பாங்காய் பவனி வந்திடுவாய்
தீங்கின்றி பக்தரைக் காத்திடுவாய் ....!!
வேப்பஞ்சேலை அணிந்து வழிபடவே
வேண்டும் வரமதைத் தந்திடுவாள் ...!
தீராப் பிணியும் தீர்த்திடுவாள் ...!
தீவினை போக்கி நலமளிப்பாள் ....!!
மஞ்சள் குங்குமம் ஒளிவீச
வேப்பிலை வாசம் நிறைந்திருக்க
மாங்கல்ய பாக்கியம் தந்திடுவாள் !
மகிமைகள் பலவும் புரிந்திடுவாள் ....!!!