கண்ணுறங்காய் என் மகனே.

கண்ணே மணியே கற்பகமே கண்ணுறங்கு
முத்தே மரகதமே புதுமலரே நீயுறங்கு
எங்கள் குலக்கொழுந்தே என்னுயிரே கண்ணுறங்கு
கண்ணை இமை போலே காத்திருப்பேன் கண்ணுறங்கு

முத்துப் பல்லழகா முல்லைச் சிரிப்பழகா
செல்ல மொழி பேசும் செல்வ மகா கண்ணுறங்கு
சந்தன முகத்தோனே சந்திரனே கண்ணுறங்கு
சிந்தாமணி விளக்கே சித்திரமே கண்ணுறங்கு

அன்னை மடியிருக்கு ஆண்டவன் துணையிருக்கு
பால் போல் நிலவிருக்கு பாவோரின் தமிழிருக்கு
தென்றல் காற்றிருக்கு தெம்மாங்குப் பாட்டிருக்கு
இன்னும் அழுகையேனோ இந்திரனே கண்ணுறங்கு

பல்கலையும் நீ படித்து பண்டிதனாய் வாழவேணும்
செல்வம் கொழித்தோங்க செழிப்புடன் நீ வாழவேணும்
எங்கும் புகழ் பரப்பி என் மகன் நீ வாழவேணும்
காலமிது கடந்து விட்டால் கண்ணுறங்க நேரமில்லை
கண்மணியே பொன்மணியே கண்ணுறங்கு என் மகனே

எழுதியவர் : டினேஷ்சாந்த் (16-Oct-13, 2:22 pm)
பார்வை : 293

மேலே