நிலா பேசுகிறது

மானிடக் கவிஞர்களே,
உங்களை வளர்த்துவிட்டேன்
என்மீதே களங்கம் கற்பிக்க
எங்கு கற்றுக்கொண்டீர்கள்..!

உங்கள் கற்பனைக்கு
உயிர் கொடுத்தேன்
மழலைக்கு எனைக்காட்டி
சோறூட்ட வழிசெய்தேன்...!

காதலர்க்கும், தம்பதியர்க்கும்
இன்னிசைத் தென்றலாய்
பால்நிலவாய் தவழ்ந்துவந்தேன்
அத்தனையும் மறந்துவிட்டீர்..!

என் கவலை மறக்க
வளர்ந்தும், தேய்ந்தும்
முழுவுடலை மறைத்தும்
என் கண்ணீரை மறைத்துவந்தேன்..!

என்னிடத்தில் மொழியில்லை
பிரித்துணரும் இனமத பேதமில்லை
பாகுபாடின்றி ஊரெங்கும் ஒளியூட்டி
என் கவலை மறந்துவந்தேன் ......!

கதைகட்ட சிலபேர் இருந்தால்
கண்ணகி வாழ்விலும்
களங்கமுண்டு எனவுணர்ந்து
கண்ணீரில் மழையாகின்றேன்.....!

என் அக்கா `பூமி` போல்
பொறுத்திருக்க நினைத்தேன்
`மாசு` கற்பிக்க முனைந்ததால்
பேசவைத்துவிட்டீர் மானிடரே.....!

நீர்க்குமிழி போல் நிலையற்றது உம் வாழ்வு
என்றும் நிலைத்திருப்பது என் வாழ்வு
புரிந்துகொண்டு நேசியுங்கள்
காலமெல்லாம் ஒளி கொடுப்பேன்..!!
-----------------------------------------------------------------
தோழி துர்க்கா

(இக்கவிதை யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. நிலா பேசினால் எப்படி இருக்கும் எனும் கற்பனை முயற்சி மட்டுமே..)

எழுதியவர் : தோழி துர்க்கா (17-Oct-13, 6:48 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 307

மேலே