"தனிமரம் தோப்பாகும் நேரம்!"

"அம்மா வாம்மா சாப்பிடலாம்"

எதுவுமே பேசாமல் மௌனமாகவே இருந்தாள் அம்மா.

"அதான் வந்துட்டேனேம்மா. இன்னும் ஏம்மா மௌனவிரதம். சரி எனக்கும் சாப்பாடு வேண்டாம்", என எழுந்து சென்றான் ரவி.

"டேய் வாடா", என்று கத்தினாள் அம்மா.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

"ஏன்டா எத்தனை முறை போன் பண்றது. எடுத்து ஒரு வார்த்தை என்னம்மான்னு கேட்டா என்ன குறைஞ்சா போயிடுவீங்க. துரை போனை எடுத்து வாள் வாள்ன்னு கத்துற"

"இல்லம்மா முக்கியமான மீட்டிங். அப்போ பார்த்து எத்தனை தடவை போன் பண்ணிக்கிட்டே இருக்க. வேலை அவசரத்துல போனையும் ஆப் பண்ணாம போயிட்டேன். மேனேஜர் பார்த்த பார்வை இருக்கே.. பார்வையாலேயே மனுசன் எரிச்சிட்டான்.

"நீ மதியசாப்பாடு எடுத்துட்டு போகல. சாப்பிட்டியா என்னன்னு கேக்கத்தான் போன் பண்ணினேன். போனை எடுக்கலேங்கவும் மனசு என்னமோ பக்கு பக்குன்னு ஆயிடுச்சு"

"சாரிம்மா", என்றான் ரவி.

"ச்சீ போடா போய் படு", என்று சொல்லிவிட்டு சிவகாமி படுக்க சென்றாள்.





ரவிக்கு பழைய ஞாபகம் எட்டிப்பார்த்தது.

சிறு வயதில் அப்பா சென்றவுடன் சொந்த பந்தமும் காரியம் முடிந்து சென்றுவிட நானும் அம்மாவும் மட்டுமே தனிமையில்..

எத்தனை இரவுகள் அழுதிருப்பாள் என் அம்மா.

எனக்காக தன்னம்பிக்கையுடன் உழைத்து என்னை படிக்கவைத்தாள். பக்கத்தில் இருக்கும் எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்னாலும், எதையுமே காதில் வாங்கிக் கொண்டது இல்லை. என் அப்பா அம்மா பெயரில் கட்டிய இந்த வீடு மட்டுமே சொந்தம் என்று இருந்தது. அம்மா லெதர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து என்னை படிக்கவைத்து இன்று நான் நல்ல கம்பெனியில் வேலை பார்க்கிறேன்.

ஆனாலும் என் அம்மாவின் பழைய முகம் ஞாபகத்துக்கு வரும். முகம் நிறைய மஞ்சலுடன் பின்னிய தலையில் அழகான பூச்சரம் கொண்டு தொடுத்திருப்பாள். அப்பா சென்றவுடன் எண்ணெய் வைத்து கொண்டை போட்டு வலம் வருவாள். எத்தனையோ முறை அவள் தூங்கும் போது பொட்டை நெற்றியில் வைத்துவிடுவேன். எழுந்து என்னை திட்டியே தீர்த்துவிடுவாள் மனுஷி. அன்று ஒரு நாள் கேட்டே விட்டேன். ஏம்மா நீ தலைசீவி பொட்டு வையம்மா என்றி. என்னை படிக்க வைப்பதற்காக தன்னம்பிக்கையுடன் வேலைக்கு சென்ற என் தாய் இதை மட்டும் கலாச்சாரம் என்று மறுக்கிறாள்.

சிந்தனையுடனே தூங்கிப்போனான். காலை விடிந்தது. எப்போதும் போல ரவி அலுவலகம் சென்றுவிட்டான்.




மகன் வேலைக்கு சென்ற பிறகு சிவகாமி இப்போதெல்லாம் வீட்டில் தான் இருப்பார்.

அன்று மதியம் பக்கத்து வீட்டு மாலா வந்து

"சிவகாமி என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டுக்கொண்டே" வந்தாள். கவலையான சிவகாமியின் முகத்தைப்பார்த்து, "என்னாச்சு", என்றாள்.

"இல்ல மாலா என்னன்னே தெரியல. கொஞ்சம் பயமாவே இருக்கு. இந்த பயல நினைச்சி. கல்யாணம் செஞ்சி பார்க்கணும்ன்னு மனசு நிறைய ஆசை இருக்கு. ஆனா இவன் மனைவியே கதின்னு இருந்தான்னா. அய்யோ ச்சீ நான் ஏன் இப்படியெல்லாம் நினைக்கணும். ஒத்தபுள்ள கருவேப்பில கொத்துமாரி பார்த்து பார்த்து வளர்த்துட்டேனா.. அதான் என்னமோ பயமாவே இருக்கு"

"ச்சீ என்னக்கா நீ இப்படி எல்லாம் மனசபோட்டு குழப்பிக்கிட்டு. நீ ரவிய எப்படி எல்லாம் வளர்த்தேன்னு இந்த தெருவுக்கே தெரியும். ஏன் ரவி என்ன சின்ன பையனா.. இதெல்லாம் புரியாதா அவனுக்கு. கவலைய விடு கண்டிப்பா நல்ல மருமகளா வருவா", என்று சொல்லி முடிக்கவும்,

ரவி "அம்மா", என அழைத்துக்கொண்டே வந்தான்.

"என்னடா மதியமே வந்துட்ட", என்றாள் சிவகாமி.

"இல்லம்மா தீபாவளி வருதுல்ல கடைக்கு போலாம் கிளம்பு", என்றான்.

இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.

அப்போது கேட்டே விட்டாள் சிவகாமி.

"ரவி உனக்கு பொண்ணு பார்க்கப்போறேன் சம்மதமாடா" என்று

"என்னம்மா இது கேள்வி. உன் இஷ்டம்", என்றான்.

மறு நாள் அலுவலகத்தில் ரவியும் பக்கத்துவீட்டு மாலாவின் மகளும் பேசிக்கொண்டனர்.

நேற்று நடந்த உரையாடலை ரவி அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

"ஆமா ரவி அம்மாவும் வந்து சொன்னாங்க. நீங்களும் சரி நானும் சரி இதையெல்லாம் நேராகவே பார்த்திருக்கோம் உங்கம்மா பட்ட கஷ்டத்தை. கவலை படாதீங்க. நிச்சயமா நான் நல்லபடியா வச்சிப்பேன் என்னோட அத்தையை", என்றாள்.

எப்படியாவது இன்னைக்கு தன் தன் அம்மாவிடம் தங்கள் காதலை சொல்ல முடிவெடுத்தனர் இருவரும்.

அன்று மாலை ரவியிடம் அம்மா, "கோவிலுக்கு போலாம் வாடா", என்று அழைத்து சென்றாள். அப்போ திருமண பேச்சை எடுத்தாள் சிவகாமி.

ரவி சொன்னான் "அம்மா நான் ஒரு வேலையா வெளியே போயிட்டு வரேன். நீ வீட்டுக்கு போ" என்று சொல்லி எழுந்து தயங்கி தயங்கி நின்றான்.

அம்மா புரிந்து கொண்டு, "என்னடா", என்று கேட்டாள்.

"அம்மா நான் ஒண்ணு சொல்லுவேன் கோபப்படாதே", என்று சொல்லி

"அம்மா பக்கத்து வீட்டு ராதா அடிக்கடி என் கனவில் வராம்மா.. என்னன்னு கேட்டு சொல்லு", என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டான்.

சிவகாமி ஒரு நிமிடம் திகைத்து விட்டு பின்பு சுதாரித்து வீட்டுக்கு செல்லும்போது வெற்றிலை பாக்கு பழத்துடன் பக்கத்து வீட்டுக்கு சென்றாள்.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (21-Oct-13, 7:34 pm)
பார்வை : 320

மேலே