தீரா வலி

நம்மில் யாரும் கண்டிராத
நரகாசுரன் மாண்டதற்காய்
தித்திப்பாய்க் கொண்டாடுகிறோம்
தீபாவளித் திருநாளை!

நசுக்கப்படவேண்டிய நரகாசுரர்கள்
நமக்குள்ளே நடமாடித்திரிய
என்றோ மாண்ட அரக்கனுக்காய்
எத்துனை எத்துனை அமர்க்களங்கள்?

எண்ணத்திற்குள் அழுக்கிருக்க
எண்ணைக் குளியல் உடலுக்கு!
கவனமெல்லாம் களிப்பிலிருக்க
கடவுள் வணக்கம் கடனுக்கு!

அலைபேசிகள் அடிக்கடி சிணுங்க
வாழ்த்து மழையில் நனைந்து போகிறோம்!
சிறப்பு நிகழ்ச்சிகளில் சிந்தை மயங்கி
தொலைக்காட்ச்சிக்குள் தொலைந்து போகிறோம்!

இதுநாள் வரையில் பழகிய வட்டம்
இளக்காரமாய் எண்ணாதிருக்க
பல வாரம் சேர்த்த பணத்தில்
பலகாரம் செய்து வைப்போம்!

பாங்காய் செய்த பலகாரம்
பத்தே நாளில் பதம் மாறும்!
பகட்டுக்காகப் பழகும் கூட்டமும்
நம் நிலையைப் பொறுத்தே
நிறம் மாறும்!

அகல் விளக்கின் ஒளியானது நம்
அக இருட்டை அழிக்க வேண்டும்!
அதுவரையில் தீபாவளியை
'தீரா வலி'யென அழைக்க வேண்டும்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (23-Oct-13, 12:27 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 106

மேலே