சொல்லப்படாத காதல் அவள் !
இன்னும் வாய்மூடியே
கண்களால் - உன்னோடு
எத்தனைநாட்கள் மௌனப்போர்
புரியப்போகின்றேனோ ?
என்ன தயக்கமோ
தெரியவில்லை – என்
காதலை உன்னிடம் சொல்ல ...
உன்னை சந்திக்கும்
தருணங்களிலெல்லாம்
சுவற்றுப்பல்லியும், சுற்றமும் - என்
காதலை உன்னிடம்
கொண்டுபோய் சேர்க்கும்
ரகசியத்தை ரசித்தப்படியே நான் ...
உன்னை பார்த்த
நேற்று தொடங்கியது
என் முதல் காதல் ...
நேற்று கொண்ட காதலை
இன்று கண்டதும் சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு ...
பொழுதுகள்
சுகமாகவோ, சுமையாகவோ
கடந்து கொண்டிருக்க
நான் மட்டும்
உன்னை தேடியபடியே ....
தேர்வு அறைகளில்
உன்னோடு அமரும் – சில
எதிர்பாராத தருணங்களை
எதிர்பார்த்தப்படியே நான் ...
சற்றே அருகில்
உன்னோடு அமர - இருந்தவாறே
இடமாறிப்போயிற்று இதயம்...
இருக்கை விட்டுக்கொடுத்த நண்பன்
எட்டிப்பார்த்து முனுமுனுத்தான் – உன்
காதலை அவளிடம் சொல் என்று ...
சொல்வதா? கூடாதா?
என்பதில் நீளவில்லை – என்
நினைவுகள் ...
மீண்டும் அவளை
பார்த்தபடியே
தொலைந்துபோனது – என்
பார்வைகள் ...
நாட்கள்
அவளது நினைவுகளால்
களவாடப்படுவதை
நினைவுபடுத்தியவாறே – என்
தனிமை ...
அவள்
நடந்து போகும்
பாதைகளெல்லாம்
முகவரிகளாயின எனக்கு ...
கல்லூரி நாட்களில்
நேரெதிரே அவள் தரிசனம் ;
விடுமுறை நாட்களில்
நீங்காத அவள் நியாபகம் ...
என்
ஒவ்வொரு அசைவுகளும்
அவள்
நினைவுகளை சுமந்தபடியே ...
கனவுகளில் மட்டும்
ஏனோ என்னை
களவு கொள்கிறாள் – அனுதினமும்
என்னில் நீங்கா
நினைவு கொள்கிறாள் ...
எந்த காதலனும் சொல்லுவான்
என்னவளை போன்ற - அழகு
இல்லை இவ்வுலகிலென்று ...
அந்த பதிலையே
அவளுக்கும் சொல்லுவேன்
நான் ...
எந்தவொரு
இடைச்செருகலும்
இல்லாத அவளது கூந்தல் ...
இமைகளோடு
மட்டுமே உறவாடும்
இரு கண்கள் ...
மௌனத்தை மட்டுமே
உச்சரிப்பு மொழிகளாகக்கொண்ட
அவளது உதடுகள் ...
ஓரமாக
ஒதுக்கி வைக்கப்பட்ட
ஒய்யார கழுத்து ...
பிரபஞ்ச அழகை
பிணைத்து நெய்த – தேகம்
அவளது உடல் ...
என்
பார்வைக்கே உரிய
இடைகள் ..
அன்பை மட்டுமே
சுவடுகளாக்கும் – நளினம்
அவளது நடை ...
இவைகளே
அவளின் மீதான – என்
வர்ணிப்புகள் ....
நெடுந்தூரத்தில்
அவளிருக்கும் நாட்களிலும்
அழியாத நேசம் – என்
நெஞ்சுக்குள் ...
அவள்
என்ன சமைப்பாலோ?
என்றில்லாமல்
என்னை சமைப்பவளாக
இருப்பாளோ
என்றே என் நினைவுகள் ...
குணமேறிய குன்றாய்,
குடும்ப அகலாய்,
அமைதியின் அருஞ்சொற்பொருளாய்,
அடக்கத்தின் அணிகலனாய்,
அன்பின் ஆணிவேராய்,
என்னையே உலகமாய்
எண்ணினாலும் – என்னை
தாண்டிய சமூகத்தின்
விழிப்புணர்வாய்,
எல்லோர்க்கும் கொடுக்க
நினைக்கும் – என்
கரங்களோடு இன்னுமிரு
கரங்களாய் ...
முழுமையாய்,
முழுநிலவாய்,
என்னை பிரதிபலிக்கும்
கண்ணாடி பிம்பமாய் இருப்பாளென்றே
அவளைப்பற்றிய
கனவுகளும், காதலும்
நீட்சிக்கொள்ள – என்னுள்
நிலவியது அமைதி மட்டுமே ...
இருதினங்கள் கடந்தும்,
இருதிங்கள் தாண்டியும்
எனக்கு தெரியவில்லை – எப்படி
என்காதலை அவளுள்
விதைப்பதென்று ...
எதார்த்த வாழ்க்கையும்,
சாதிய தடைகளும்,
காதலுக்குப் பொருளற்ற
பொருளாதாரமும் – கலைத்து
விடப்போவதில்லை
அவளுடனான என்
இணைவை ...
அவள் உணர்ந்திருப்பாள்.
என் கண்கள்
என்றோ அறிவித்தது – என்
காதலை அவளிடம் ...
என் மௌனம்
என்றோ மணந்தது அவளை ..
காதலுக்கு மொழிகள்
தேவையில்லை என்பதை
மீண்டுமொருமுறை மெய்ப்பித்து
கர்வம் கொண்டது – என்
கள்ள மௌனம் ...
காற்றை
சிறைபிடிக்க நினைப்பதும்,
காதலியை
கைபிடிக்க நினைப்பதும்
உண்மையான தேடலின்
சுகமான பொய்கள் ...
இப்படியே அலைமோதிய
என் நினைவுகள்
அமைதிகொண்டது – ஆருயிர்
நண்பனின் அள்ளமுடியாத
சொற்களால் ...
சுதந்திரமாய்
சுற்றித்திரிந்த – என்
அன்னப்பறவை சிறைகொண்டதாம்
சிலவருடங்களுக்கு முன்னரே
காதலால் ...
இரவு நேரத்து
காரிருளாய் – திக்கற்று
போனதுஎன் காதல் ...
சற்றே
நினைவு தவறிய - என்
இருப்பு இடறிவிலாமல்
இயல்பாய் எழுந்தது
இருந்தபடியே ...
வார்த்தைகளால்
வடிக்கயியலாத வலிகள்
வலிமைபெற்றன – என்
அவளின் கடைசி
நினைவுகளை சுமந்தபடியே ...
சமுத்திரம் போன்ற
என்காதல் – இனி
எந்த நினைவலைகளோடு
மோதி விளையாடும் ?
என் நேசிப்புகள்
என்னை மட்டுமே
தோற்கடிக்கின்றனர் ...
முற்றுகொள் மனமே .
முடிவு காதலுக்கு இல்லை,
காதலிக்கு தான் ...
நான் பறிகொடுத்த
என்நெஞ்சம் மீண்டும்
பத்திரமாய் வந்துசேர்ந்தது
என்னிடமே ...
பெற்ற தாயையும்,
உற்ற தாரத்தையும்
தவிர்த்து மற்றோரை – உடன்
பிறந்தவளாகக்கொள் என்று
எந்நாட்டவரும் எண்ணிவிடாத
உயரிய பண்பாட்டை
ஊட்டி வளர்த்தது
என் தமிழ் ...
பாரினில்
பலஇனங்கள் இருந்தபோதும்
இக்கருத்தை – என்றோ
சொல்லி ஏற்று நடந்தவன்
தமிழன் ...
நானும் தமிழன் ...
காதலியை
சகோதரி என்றழைக்கும்
ஈனப்பண்பாட்டை
என்றும் ஏற்காது
என் தமிழ் ...
காதல் என்உடன்
பிறந்தது தான் !
உடன்பிறந்தவள் அல்ல ...
இனியுமொரு முறை
தீண்டாது - என்
கண்கள் உன்னை ...
உன்னையறியாமல் நான்,
என்னையறியாமல் - என்காதலை
உன்னிடம் அன்றே
வினவியிருந்தால்
விவாதப்பொருள் ஆயிருக்கும்
உன் கற்பு ...
நீ
வேறொருவரிடம் காதல்
சிறைப்பட்டாலும் - என்னை
விடுவித்து விட்டாய்
விடியலை நோக்கி ...
இந்த தோல்வியிலிருந்தே
துவங்குகிறது
என் வாழ்விற்கான
அடுத்த பயணம் ...
சொல்லாமல் விட்டுச்செல்கிறேன்
என் காதலை ...
கலங்காமல் பார்த்துக்கொள்
உன் காதலை ...
நீ
கர்ப்போடும், களிப்போடும்
வாழ இன்றே
உடன் கட்டை ஏறுகிறது
என் காதல் ...
மௌனமாய்
கருப்பையில் வளர்ந்த – என்
காதல் சொல்லாமல்
மெல்லக் கலைந்தது போனது ...
நல்லவேளை இந்தகாதல்
என்னை கல்லறைக்கு
அனுப்பவில்லை ....
மாறாக,
உண்மைக்கு உயிரோவியம்
கொடுக்கச்செய்தது ....
காதல் ஒருபோதும்
தோல்வி கொள்வதில்லை ;
காதலர்கள்தான் ஒவ்வொரு முறையும்
தோல்வி கொள்கின்றனர் ...
காதல் நிஜமென்றால்,
தோல்வி நிழல் ...
நிழலைக்கண்டு துவளாதே !
நிஜமே என்றும் நிதர்சனம் ...
காதல்
வானில் பயணிக்காத
எந்த பறவைக்கும் சிறகுகள்
இருந்தும் பயனில்லை ...
காதல்
தோல்விக்காக ஏங்கிவிடாதே !
பின்வரும்
எல்லா வெற்றிகளும்
உன்னை எதிர்நோக்கியே !
சின்ன சின்ன
சந்தோசங்களையும்,
சில எதிர்பாராத
ஏக்கங்களையும்,
என் மனதில் விதைத்த
சிறு துரோகங்களையும் – அதை
கொடுத்தவளிடமே விட்டுச்செல்கிறேன் ..
உள்ளத்தால்
நேசிக்கப்படுகிற யாவும்
உடலால் தீண்டப்படுவதில்லை ...
உடலின் மீதான
நேசிப்புகள் யாவும்
உள்ளங்களால் தீண்டப்படுவதில்லை ...
மீண்டுமொரு
காவியம் பிறப்பெடுக்க
வேண்டுமொரு
காதல் ...
நன்றி சொல்கிறேன்
நலமுடன் வாழ்க நீ ...
என்றுமே என்
சொல்லப்படாத காதல் அவள் !
-சசிகுமார்