புத்தாண்டுதோன்றின் பொங்கலோடு தோன்றுக அப்படி இல்லையெனில் தோன்றலின் தோன்றாமை நன்று..!
தினசரியில் விடுமுறை
நாட்களை மட்டுமே
ஆராயும் பள்ளிச்சிறுவன்!
முத்து,முத்தாய்
பண்டிகைகள் நான்கும்
வரிசைக்கட்டி வந்துநிற்க!
கட்டி வைத்த ஆசைகளை
கட்டவிழ்த்து விட்டதனால்
வானரம் என பட்டம் சூட்டி
விட்டனரே!
போகி
அதிகாலை கண்விழித்து
சேர்த்து வைத்த குப்பைகளை
லங்கைக்கு தீ வைத்த
அனுமானாய் தீ வைக்க!
குப்பையோடு சேர்ந்து
மன அழுக்குகளும் எரிந்திடுமே!
கடைவீதியில்
புத்தாடை,புதுப்பானை,
அச்சுவெல்லம்மென
அடுக்கடுக்காய் அப்பா வாங்க!
பொங்கல் வாழ்த்து அட்டை
வேண்டுமென கேட்டுவாங்கி,
பக்கத்துவீட்டு நண்பனுக்கும்
தபால் மூலம் வாழ்த்து சொன்னேன் !
பொங்கல்
நீராடி,புத்தாடை பூண்டு
சூரியனை வணக்கிநிற்க,
பொங்கப்பானை பொங்கிவர!
பொங்கலோ, பொங்கல்
பொங்கலோ, பொங்கல்லென்று
தொண்டை வற்ற கூவிடுவேன்!
ராமன் முறித்த, விராடு தனுசுப்போல்,
கரும்புகளை லாவகமாக
முறித்து சுவைத்திடுவேன்!
மாட்டுப்பொங்கல்
குழந்தைப்போல்அடம் பிடிக்கும்
மாடுகளை விடாப்பிடியாக
பிடித்திழுத்து அழுக்குப்போக
குளிக்கச்செய்து!
கொம்புகளுக்கு அழஅழகாய்
வர்ணம் தீட்டி!
கலர் கலராய்
பலூன்கள் கட்டி!
சந்தன, குங்குமப்பொட்டிட்டு,
அணிகலன் அணிவித்து
பொங்கல் தின்ன செய்து!
பொங்கலோ, பொங்கல்
மாட்டுபொங்கல்லென்று
மஞ்சு விரட்டி வீதி உலா வந்திடுவேன்!
காணும் பொங்கல்
உற்றார், உறவினர்
சுற்றமும் பொதுவிடம்
ஒன்று கூடி!
கட்டிவந்த கட்டுச்சோற்றை
கூட்டஞ்சோறாய் மாற்றியமைத்து!
பக்குவமாய் பதம்பார்த்து
அனைவரின் வாழ்த்துபெற்று
அழகாய் முடியுமே பொங்கல்!
மறுநாள் பள்ளி துவங்க,
தமிழ் ஆசிரியர்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
என்றுரைக்க!
என்செவிகளில் மட்டும்,
புத்தாண்டு தோன்றின் பொங்கலோடு தோன்றுக அப்படி இல்லையெனில்
தோன்றலின் தோன்றாமை நன்று.
என கேட்டது....................!
என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...