பூ பூக்கும் ஓசை

என்ன வேணும் உனக்கு...?

ஒண்ணும் வேண்டாம்.

ஏன் ஒரு மாதிரியா இருக்க...?

ஒரு மாதிரியான்னா..?

ஏதோ திக்பிரமை பிடிச்ச மாதிரி. எங்கேயோ வெறிச்சு பாத்துக்கிட்டு...யார்கிட்டயும் பேசாம....

இப்டி இருக்க எனக்குப் பிடிச்சு இருக்கு.

இப்டி இருக்க கூடாதுடா அம்பி. மனுசாள் கூட ஒட்டணும். சின்ன வயசுன்னா உனக்கு...வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாம் பாக்கணுமோ இல்லியோ...

நல்லது கெட்டது நீங்க பாத்திட்டீங்களா சாமி...? அவன் குருக்களைப் பார்த்துக் கேட்டான்.

பாத்துண்டுதானே இருக்கேன். டெய்லி பகவானை சேவிக்கிறேன்...வர்றவா போறவா எல்லாருக்கும் வேண்டி பூஜை பண்றேன்...காலையில நடை தொறக்கிறேன்.. நைட்டானா அடைக்கிறேன்.....ஏதோ ஓடிண்டிருக்குடா அம்பி...

12 மணி ஆச்சு நான் கோயில் நடை சாத்தணும்.....அடிக்கடி உன்ன இங்க பாக்குறேனோ இல்லையோ அதான் படக்குன்னு கேட்டுட்டேன்...அம்பிக்கு என்ன வயசாறாது..?

27

பாத்தியா ரொம்ப சின்ன வயசு...பகவான வேண்டிண்டு போய்கிட்டே இரு...நல்லா அமர்க்களமா வருவே...என்ன வேலை பாக்கறடா அம்பி...

ஹோட்டல்ல...

ஹோட்டல்லனா...?

ஹோட்டல்.

குருக்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தபடி சொன்னார். நடை சாத்தப் போறேன்டா அம்பி.

நடை சாத்திக்கோங்க. நான் பிரகாரத்துக்குள்ளதானே இருக்கேன். கோயிலை பூட்றப்ப சொல்லுங்க.

சரிடா அம்பி நான் வர்றேன். குருக்கள் இடுப்பில் சாவியை சொருகிக் கொண்டு கையிலிருந்த பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்.

அவன் கண் மூடி அமர்ந்திருந்தான்.

ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை இது. எத்தனை திட்டமிட்டு நகர்ந்தாலும் அடுத்த கணத்தில் என்ன நிகழும் என்று யாருக்குமே தெரியாது. எல்லோருக்கும் ஏதோ ஒன்று வேண்டுமென்று வெறி பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் ஒன்றுமே கிடையாது அல்லது கொண்டு செல்ல முடியாது என்பதை வெகு சிலரே உணர்ந்திருக்கிறார்கள். எதேச்சையாக இந்த பூமிப் பந்துக்குள் வந்து விழுந்தவர்கள் மனிதர்கள். வாழ்கை அவர்களுக்கு அருளப்பட்டது. அவர்கள் அதை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாமே நிகழ்ச்சிகள். ஒன்று ஒன்றோடு சேர, ஒன்று ஒன்றிலிருந்து பிரிய இங்கே புதிது புதிதாய் எல்லாம் நிகழ்கிறது. இதுதான் வேண்டும் என்ற பயணித்தில் எது வேண்டுமோ அது ஆச்சர்யமாய் கிடைத்தும் விடுகிறது. எத்தனையோ முறை முயன்று தோற்றுப் போய் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள் எல்லாமே. இது சாத்தியக்கூறுகள் நிறைந்த வாழ்க்கை. எதுவுமே இல்லை என்று சொல்ல முடியாது. எல்லாம் இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. கணத்துக்கு கணம் மாறும் ஒரு ஓட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

எந்த கணத்தில் எனக்குள் தடம் புரண்டு ஒரு புதிய பார்வை கிடைத்தது. ஊர் சுற்றிக் கொண்டு உல்லாசியாய் திரிந்து கொண்டிருந்தவனை ஒரு கணத்தில் இழுத்துப் பிடித்து நிறுத்தி பார்வையை மாற்றிய விசயம் எது. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு படிக்க ஆரம்பித்த அன்று ஏதோ ஒன்று எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் மாற்றம் ஒன்று மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்தது. அது வெகு நிச்சயமாய் ஒரு அற்புதமான அனுபவம்தான். அதை சொற்களுக்குள் கொண்டு வருவது வெகு கடினம் தான். நரேந்திரனின் வாழ்க்கை தொடங்கிய விதமும், அவன் எதிர் கொண்ட வலிகள், மற்றும் கடவுள் பற்றிய அவனின் நிலைப்பாடு என்று...எல்லாமே ஒரு வித வேகத்தில் ஒரு காட்டாறாய் என்னை இழுத்துச் சென்றது.

குறைகளை மிகைகள் ஆளும். இது நியதி. அன்று....என்னைச் சுற்றி இருந்த மிகை நேர்மறையாக இருந்ததை உணர்ந்தேன். நரேந்திரனின் வாழ்க்கைக்குள் விழுந்தேன். அவன் வாழ்க்கையின் பெரும்பயணத்தை வார்த்தைகளில் வாசித்து அந்த வார்த்தைகளை நினைவுகளால் கட்டித் தழுவிக் கொண்டு பேச்சற்று, உணவற்று எந்த தொடர்புமற்று கிடந்தேன். ஆமாம் நரேந்திரன் என்னை தடம் மாற்றிப் போட்டுவிட்டான். 39 வயதில் அவன் எப்போத் இறப்பான் என்று முன் கூட்டியே சீடர்களிடம் சொல்லி வைத்திருந்தான். பேசிப் பேசி தனது வேதாந்த விளக்கங்களை இந்தியா முழுதும் இறைத்து வைத்தவன் அவன். ஒப்பற்ற ஒரு மார்க்கத்தின் புகழினை உலகத்தின் முன்பு சலனமின்றி எடுத்து வைத்தவன் அவன்.

விவேகானந்தர் ஒரு மாலை வேளையில் இறந்து போகிறார். அவர் இறந்த பின்பு அவர் உடல் எரியூட்டப்பட்டு விட்டது. அவர் விதைத்துச் சென்ற விதையோ இன்று இந்திய தேசம் முழுதும் வேர் பிடித்து பரவி நிற்கிறது. அவன் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை ஆனால் அவன் வாழ்ந்ததற்கு காரணம் இருந்தது. எதிர்பாராமல் நாம் வந்து விழுந்த இந்த பூமிக் கிரகத்தின் சிக்கல் மிகுந்த இடம் எது தெரியுமா?

மனித மனம்தான்.

சிக்கலான மனித மனங்கள் மரணத்திற்கு பயம் கொள்கிறது. மரணம் இல்லாவிட்டால் இங்கே மதங்கள் இல்லை. கடவுளர்கள் இல்லை....ஆனால் மரணம் இல்லாவிட்டால் வலியவன் எளியவனை தனது அடிமையாக்கி வைத்துக் கொண்டு அவனை கடவுள் என்று அறிவித்துக் கொள்ளும் அபத்தமும் நிகழ்ந்தேறும். மனம் என்பதே இங்கே பிரச்சினை. நான் மனதை கடந்து விட்டேனா என்று தெரியவில்லை ஆனால் மனம் என்னும் விசயம் எனக்கு ரொம்பவே மெலிதாகி இருக்கிறது.

அதே உலகம். அதே மனிதர்கள் அதே வாழ்க்கை. அதே போராட்டம். இங்கே ஞானம் என்னும் பூ பூத்து என்ன நிகழ்ந்து விட்டது பெரிதாய்...? என்று கூட பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

பூக்கள் பூப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது. பூக்களை வைத்துக் கொண்டு நீங்கள் என்னதான் செய்ய முடியும். பூக்கள் உங்களுக்கு ஒன்றையுமே கொடுப்பதில்லை. அவை பூப்பதும் ஏதோ ஒன்றை கொடுப்பதற்காக இல்லை. அது பூத்தது என்னும் அந்த பரவசத்தை எப்படி பூ இல்லாமல் பெற முடியும். பூவை விற்று காசாக்குபவனுக்கு வந்து விடுமா அந்த பரவச நிலை. பூக்களை விழிகள் விரித்துப் பார்த்து அதை ஒரு சுகானுபவமாக்கிக் கொள்பவனுக்கும் அதை வியாபாரம் செய்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா...

ஒன்றுமே இல்லாத ஒரு பைசா பிரயோசனப்படாத வானவில்லை அந்த கணத்தில் பார்த்து ரசிக்கும் இனிமையை வானவில் பற்றி பேசிக் கொண்டிருப்பது கொடுத்து விடாது. அழகுகள் இனிமையானவை நாம் ரசிக்கும் வரையில்....அடைய நினைக்கையில் ஆரம்பிக்கிறது அபத்தங்கள்.

யோசித்துக் கொண்டே இருந்தான் அவன்.

மூச்சினை உற்றுப் பார்த்தான். வேகம் சீரானதாக இல்லை என்று உணர்ந்தான். மூச்சை வெகு நிதானமாக இழுத்து அடி வயிறு நிரப்பி பின் வயிறு காலியாகும் வரை மூச்சை வெளியே விட்டான். தொடர்ந்து செய்து கொண்டிருந்த போது ஒரு நிதானம் புத்தியில் சுடர் விட்டது. அம்மா அவனின் நினைவுக்கு வந்தாள். அப்பா வந்தார், உறவுகள், அலுவலகம், வேலை சென்னை, சென்னையின் போக்குவரத்து....உமா நினைவில் வந்தாள்.

உமா என்னை நேசிக்கிறாள். அவளை நானும் நேசிக்கிறேன். இதைக் கடந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடாமல் இதை பார்த்துக் கொள்ள வேண்டும். நகர்ந்தால் என்ன ஆகும் என்று கோணிச் சிரித்தது மனம். ஒன்றும் ஆகாது....வாழ்க்கை என்னை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு பொய்யாய் ஒரு ஆட்டம் போடச் சொல்லும். திருமணம் என்ற ஒரு நிகழ்வை நிகழ்த்தி பின் புதிது புதிதாய் பொறுப்புகளைக் கொடுத்து, அதன் மூலம் சிக்கல்களைக் கொடுக்கும். சந்தோசங்கள் என்று தற்காலிகமாய் ஏதேதோ எழுதி வைக்கும். அதன் முடிவில் சிரித்துக் கொண்டே துன்பங்களும் வரும்.

அறிந்தே சகதியில் பல மைல் தூரம் இறங்கிப் போய் விட்டு பின் திரும்புவதற்கு கஷ்டப்படுவதை விட....விலகி இருத்தல் நலம் இல்லையா.

வாழ்க்கையின் இயல்பை நீ மீறுகிறாயே...? மனம் கேட்டது.

மீறுவதுதான் எனது இயல்பு என்றால் என் வாழ்க்கையே அதுதான் என்று ஆகிப் போகிறதே...

கண் மூடி அவன் அமர்ந்திருந்தான். கோயிலின் பிரகாரத்துக்குள் குபு குபுவென்று காற்று அடித்துக் கொண்டிருந்தது. கோயிலின் ஒரு மூலையில் அவன் அமர்ந்திருந்தான்.

ஏன்டா அம்பி இன்னும் போகலையா நீ...?

கண் விழித்துப் பார்த்தான். குருக்கள் வந்திருந்தார்.

மணி பார்த்தான் மாலை நான்கு.

இல்ல இனிமேதான் போகணும் சாமி. இன்னிக்கு நைட் டூட்டி.

அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தார் குருக்கள்.

ஏன்டா அம்பி.. உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்...?

கேளுங்க சாமி....

ஒரு நாள்ல மத்தவாள விட நாந்தான் ஸ்வாமி கூட அதிக நேரம் நிக்குறேன். வர்றவா எல்லோருக்கும் மந்திரம் சொல்லி அர்சனை செய்றேன். பகவானுக்கு அபிஷேகம் செஞ்சு அலங்காரம் செஞ்சு... எல்லாம் செய்றேன்...

கூடுமான வரைக்கும் நேர்மையாவும் இருக்கேன். இருந்தாலும் ஏதாவது ஒண்ணு வாழ்க்கையில அபத்தமா நடந்துண்டே இருக்கு... நிம்மதி இல்லாம போயிடுது....

அவன் அவரை உற்று நோக்கினான்.....

கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க ஸ்வாமி....எல்லாம் தீரணும்னு....தீர்ந்துடும். பகவான் கை விடமாட்டார். எல்லாமே தீரணும்னா எதுவுமே வேணாம்னு இல்ல சாமி இருக்கணும். கடற்கரையில நின்னுகிட்டு அலை அடிக்குதுன்னு ஏன்னு கேட்டா என்ன சாமி பதில் சொல்றது...

கரைய விட்டு தூரமா போங்கன்னுதான் சொல்ல முடியும். தூரமா போகணும்னு பகவான் கிட்ட வேண்டிக்கோங்க....கடலைப் பாக்கணும்னா தூரத்துல நின்னும் பாக்கலாம். நீங்க கிட்ட நின்னு பாக்குறீங்க. ஒரு நாள் இது என்ன இது நான் ஏன் இங்க நிக்குறேன்னு கடவுள் தோண வைப்பார். அன்னிக்கு நகர்ந்துடுங்க...

என்னவோடா அம்பி.. ஒண்ணும் நேக்கு புரியலை. வா... கற்பூரம் காட்றேன்....வந்து பகவானை சேவிச்சுக்கோ....

கற்பூரத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டவிபூதியை அவன் வாங்கிக் அணிந்து கொண்டான்.

வர்றேன் சாமி....கூறி விட்டு கோயிலை விட்டு வெளியேறினான்.

மாலை வேளை கோயிலுக்குள் கூட்டம் சேரத் தொடங்கி இருந்தது. குருக்கள் பிசியாகத் தொடங்கி இருந்தார்.

எழுதியவர் : Dheva.S (26-Oct-13, 4:09 pm)
பார்வை : 281

மேலே