யாரறிவார் எம் துன்பம்
மாறிவரும் பருவகால மாற்றங்கள்
சில நேரங்களில் ரசிக்கும்படியும்
பல நேரங்களில் வெறுக்கும்படியும்..!
ஆதவனின் அனல் பறக்கும்
அக்கினி ஆட்சியில்
இதமான தென்றலையும்
நிழலையும் தேடியலையும்
எம்மிதயம் குளிர்காலத்தில்...!
தாமதமாக சோம்பல் முறித்துவரும்
கண்காணக் கிடைக்காத கதிரவனும்
வேளைக்கே போர்த்தப்படும்
இருட் போர்வையால் படுமவதிகளும்
வடிக்கமுடியாதவை வார்த்தைகளில்..!
வெயில்காலத் தொடக்கத்தில்
தேவையில்லையென்று
அலுமாரிகளில் புதைக்கப்படும்
கையுறையும்,காலுறையும், குல்லாயும்
உடலைப் போர்க்கும் அங்கிகளும்
குளிர்காலத் தொடக்கத்தில்
தூசு தட்டப்படுகின்றன அவசியமாய்..!
முழங்கால்வரை நீண்டிருக்கும்
பாதணிகளையும் மீறி குளிர்
பாதத்தை ஊடுருவும்போது
எதையும் ரசிக்கமுடியாமல்
விறைத்துப் போய்விடுகிறது உடல்..!
சிறு பூக்களாய் பனிக் கட்டிகளாய்
தெருக்களில் வீழ்ந்துகிடக்கும்
வெண் பனிக் கட்டிகளை முன்னர்
தூரவிருந்து ரசித்த உள்ளம்
காலிடறி வீதியில் விழும்போது
சபித்துக்கொள்கிறது அனைத்தையும்..!
வாகனங்களை மூடி,
பயணங்களை தாமதப்படுத்தும்
வழுக்கவைக்கும் பனிக்கட்டிகள்
உயிருக்கும் ஆபத்தானதாய்
விதியின் விளையாட்டால்
அங்க முறிவுக்கும் காரணமாய்
மிதிக்கவைத்துவிடுகிறது
வைத்தியசாலைப் படிக்கட்டுக்களை..!
மாறிவரும் பருவகால மாற்றங்கள்
சிலநேரங்களில் ரசிக்கும்படியும்
பலநேரங்களில் வெறுக்கும்படியும்..!
-------------------------------------------------------------
தோழி துர்க்கா