அப்பாவின் ஒப்பாரி

மனமத்து போச்சோ மல்லியப்பூ
மழைவந்து சரிஞ்சதோ மணிமாளிக...

வாசலிலே காத்திருந்து
செவ்வரளி சிரிப்போட
வாப்பான்னு வாரியணைக்க
வாரமாக காணலியே...!!

அழகு மணி மாலையோட
அசந்துபோக சீர்செனத்தி
அத்தனையும் தந்துன்ன
ராணியக்க ஆசைப்பட்டேன்...

ஆடியடங்கும் வேலையில
ஆத்தாளா என தாங்க
நித்தம் நித்தம்
கனவுகண்டேன்...

வாங்கிவந்த வெள்ளிகொலுசு
வழிசேற பாதமில்ல
விதநெல்லும் வீணாவ
விவசாயி கதியென்ன...??

விதிதான்னு விட்டிட நான்
கல்லுபெத்த புள்ள இல்ல...

இடுகாடு வேணாண்டா
இருட்டுன்ன பயப்படுவா
வேகமா பேசிடகூட
சின்னமக சிவந்திடுவா...

விளையாட்டா திரிஞ்சவடா
வெள்ளந்தி பணிப்பூடா
விரகேத்தி வெந்திடவ
தங்கமேனி தாங்கிடுமா...??

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (31-Oct-13, 8:02 pm)
பார்வை : 114

மேலே