சாபங்கள் தொடரும்-கே-எஸ்-கலை
புத்திக்கு எட்டிய
தூரம் வரை
விசித்திரங்களைத்
தேடி ஓடும்
காலத்தின் சுழற்சியில்
சித்திரங்கள்
சிதைந்துப் போவது
சகஜமே !
அலறலும், குமுறலும்
அழுகையும் , கதறலும்
இல்லாத வாழ்க்கை
இல்லாது போக -
முகாரி அலப்பறைகளில்
செவிப்பறைகளைக்
கிழித்துக் கொண்டு உலாவும்
விகாரிகளாய் நாம் !
கடுகதி சாலைகள் தேவை
களிப்புற சோலைகள் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நிர்கதியாய் அல்லலுறும்
ஏழைகளின் சாவைத் தள்ளிப்போட
ஓலைக் குடிசைகளாவது
தேவையல்லவா ?
காதுகேளாமல்
கண்கள் திறவாமல்
கைகால்கள் அசையாமல்
உட்கார வைத்திருக்கும்
கடவுளுக்கு அறுவேளை
பொங்கலோடு மோதகம் !
வாய்கிழியக் கதறி
நோய் கிழித்துச் சிதறும்
எங்களுக்கேன் பாதகம் ?
ராஜதந்திரங்களும்
பூஜைமந்திரங்களும்
சூறையாட மட்டுமா ?
செய்வாய்க்கு
செய்மதி ஏவும்
செல்வந்த அரசாங்கமே...
உமிழ்நீரிட்டு
நாக்கு கலப்பைகள்
உழுதுக் கொண்டிருக்கும்
வெறு வாய்களுக்கு
ஒருவாய்ச் சோறு
தருவாய் எப்போது ?
====
வாழ்வதற்கு சரியான
வழிசமைக்க முடியாத
துர்ப்பாக்கிய அரசியல்
தொடரும் வரை
வாழ்த்த வேண்டிய
சாதனைகள் - சாபங்களால்
சபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் !