விலை இல்லா மாது…

ஒரு நாள் காலை
கண்ணுறக்கம் கெட்ட வேளை!

உலகம் இன்னும் உறங்குகிறதா என்று
வேவு பார்க்க மாடிப்படி ஏறினேன்!

கண்ணுக்கு எட்டும் தொலைவில் ஒரு கன்னி
இல்லை இல்லை கண்ணகி
நான் கண்ணுறுவது கண்டு வெட்கி
ஓடிச்சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள்!

அவள் லட்சணங்கள் என்னை அலைகழிக்க,
ஓரிரு நாட்களில் அவலட்சணம் ஆகிப்போனது என் மனதும்,முகமும்!

மூன்றாம் நாள்!
பதுமன்(சூரியன்) விழிப்பதற்க்கு முன்
முந்திச்சென்றேன் மாடிக்கு!

இம்முறை கதவுகளுக்கு
புரிந்தது என் அவலம்
தாழிட மறுத்தது அவளிடம்!

சிறு புன்னகையை மட்டும்
எனக்காக உதிர்த்துவிட்டு
தொடர்கிறாள் பொடி நடையை
மாடியிலேயே!

என் ரசனைக்கு கிடைத்த அங்கிகாரமாய் எண்ணி
எதிர் பார்க்கிறேன் மறுநாளை!

அடுத்த நாள்...
என் வருகைக்காக
என் வீட்டு மாடியின் மேல்
படர்ந்து கிடக்கிறது அவள் பார்வை!

ஏதோ பேசத் துடிக்கிறாள்!
வார்த்தைகள் பரிமாற வழி இல்லாமல் போக
தூரத்தைத் துடைத்தெறிந்து சைகைகளால் தொடர்கிறோம் ஊமைகளாய்!

விடைபெறுவதற்க்கு முன்
ஏதோ ஒன்று பிடிப்பதாய் சொல்கிறாள்
என்னிடத்தில்!

இனம் புரியாத சந்தோஷம்
இமைப் பொழுதில்
இடம் பிடிக்கிறது இதயத்தில்!

இது தான் காதல் என்று
இலக்கணம் சொன்னது
என்னிடத்தில்!

சத்தமில்லாமல்,
சறுக்கல் இல்லாமல்,
காதல் கொள்கிறேன் அவளிடத்தில்!

ஒவ்வொரு விடியலையும்
அவளது விழிவட்டத்திற்குள்
தொடங்கினேன்!

நாட்கள் நகர்கிறது அவளுடன்
காதலைச் சொல்லாமலே........

ஒரு நாள் அவசரம் என்று அழைத்தாள்.....

பதறிப்போய் சுற்றம் சுதாரிப்பதற்க்குள்
அவள் வீடு சேர்ந்தது என் கால்கள்!

கதவின் முன் நின்றதுதான் ஞாபகம்
அடுத்த நொடி அது என்னை
உள்ளிட்டு தாழிட்டுக்கொண்டது
தானியங்கி கதவு போலும்!

நலம் விசாரித்தேன் அவளிடம்
பதில் வந்தது என்னை அணைத்துக்கொண்டு!

மேகமில்லாமல்
வியர்வை மழை பொழிந்தது
மோகத்தில்!

இருநூறு அடி தூரத்தில் தெரியவில்லை
இரண்டடி தூரத்தில் தெரிந்தது
இருமுழம் நீளத்தில் அவள் கழுத்தில் கயிறு!

என் காதலைக் காமம் கொரித்துக்கொண்டிருக்க
பிறர் மனை நோக்கல் பாவம் என்றெண்ணி
ஏதோ ஒரு வேகத்தில்
தடம் மாறும் முத்தங்களுக்குத்
தடை போட்டு வெளியேறினேன்


என்றால் நம்பவா போகிறாய்?

போதும் உன் கற்பனைக் குதிரையால்
இலை மறை காயை மேய்ந்தது!

என் காதல் காமத்திடம்
தோற்ற
துக்கம் துறக்க ஓரிரு மாதம் ஆனது!

ஒரு நாள் எதேர்ச்சையாக என்
மாலை நேர மாடிப் பிரவேசம்!

அங்கே....
நான் வைத்த முற்றுப்புள்ளியை
எதிர் மாடியில் தொடர்கிறான் ஒருவன்
பேரத்துடன்.......!

ஒரு நிமிடம் அவள் தாலிக் கயிரு
வந்து சென்றது கண் முன்....

மதுரை மாநகரே கதறியிருக்கும்,
காவல்துறைக்காக கயிரு தரித்த
இந்த கண்ணகியைக் கண்டிருந்தால்!

அப்போதுதான் புரிந்தது
அவள் விலைமாது என்றும்,
அன்று மட்டும் எனக்காக விலைக்கு
விடுமுறை அளித்த
விலை இல்லா மாது என்றும்!

எழுதியவர் : Jegan.T (8-Nov-13, 4:45 pm)
பார்வை : 156

மேலே