எட்டிக்கனி கசந்தாலும்

எட்டிக்கனி* கசந்தாலும்
எழில் சிந்தும் புறஅழகில்
தொட்டேனும் பார்த்துவிட
துணிந்துவிடும் மனங்கூட.
உள்ளிருக்கும் நஞ்சறிந்தால்
உளமதனை வெறுக்கிறது
கள்ளிருக்கும் மலராஅது
கன்னித்தேன் சுவைபிழிய?
மேற்பரப்பில் முள்ளிருக்கும்
மிகப்பெரிய பலாக்கனியில்
காற்கையும் வலியெடுக்கும்
கனிபிளந்து சுளைஎடுக்க.
பக்குவமாய்த் தோல் அகற்றி
பாங்காகச் சுளை எடுக்க
முக்கனியின் சுவையறிந்தோர்
முயற்சிக்கவா யோசிப்பார்?
தட்டில் வைத்த சுளை
தங்கம்போல் பளபளக்க
வெட்டி எடுத்தவர்க்கு
வேட்கையும் இனித்திடுமே!
வேடிக்கை பார்த்தவரும்
ஓடிவந்து காத்துநிற்பார்
நாடிடும் நறுந்தேன் சுவை
அவர்நாவை எட்டுமவரை.
உருவு கண்டு மயங்கும் நிலை
தெளிந்து விடும் மெய்யறிவால்.
* NUX - VOMICA