மூளைச்சாவு
எதிரில் நீண்ட,
வார்த்தை சாலையில்,
குறுக்காய் கிழித்த,
வரிகளின் ஊடே-
இலக்கு மறந்த
ஊர்வலம் போல,
இயக்கம் மறந்து
நிற்குதென் மூளை.
நிசப்த வெளியை
துளைக்க முயன்று,
இறகைத் தொலைத்தது
கருத்துப் பறவை.
ஆழிக் காற்றாய்
கவிதைகள் சுழன்றும்,
அசைய மறுத்தது
எழுத்து மரம்.
எண்ண விளக்கில்
எண்ணெய் ஊற்றியும்,
எரிய மறுத்தது,
உணர்ச்சித் தீ.
தெறித்த ஒர்வரியும்,
தெரியாமல் போனது,
நிரப்பாத வெற்றுத்தாளின்
நீள அகலத்தில்.
இயந்திரமாய் இருந்தால்
எரிபொருள் ஊற்றுவேன்.
இயங்குதல் மறந்ததை
எதைக்கொண்டு ஏற்றுவேன்?
காய்ந்து கனத்த பேனா மையின்
கறைபடியா காகிதத்தில்,
கவிதையாக எஞ்சுகிறது
கண்ணீர்த் துளிகள்.