காஷ்மீர் பேசுகிறேன்-காது கொடுங்கள்- --அஹமது அலி

பூலோகத்தின்
சொர்க்கம் நான்....
பூகோளத்தின்
புதைகுழியும் நான்...
""""""
பனி போர்த்திய
விதவை நான்....
பிணி தீரா
பிரச்சனையும் நான்....
""""""
அழகென்றால் அல்லலும்
வளமென்றால் ஆக்கிரமிப்பும்
அனுபவித்து நான்
கற்றுக் கொண்டிருப்பவை!
"""""'
சுதந்திர நாட்டின்
அடிமையும் நானே!
சுதந்திரக் காற்றுக்காய்
மூச்சுத் திணறும்
சுவாசமும் எனதே!
""""""
சுயக் குரலெழுப்பி
அடங்குவதற்குள்
குரல்வளைகள்
நெறிக்கப் படும் நெறிகளும்
எனக்கு!
"""""
என் மடியில்
ஆப்பிள்கள்
பறிக்கப்படுவதைப் போல்
என் மக்கள் உயிரும்
பறிக்கப் படுவது
சாதாரன நிகழ்வே!
"""""
என் வீட்டில் இராணுவம்
எப்போதும் நுழையலாம்
யாரையும் சிறை பிடிக்கலாம்
எந்தக் குற்றத்தையும்
எவர் மீதும் சுமத்தலாம்!
"""""
சிறுவர் படுகொலையும்
சின்ன விடயமே
வன்புணர்வுகள்
வாடிக்கையே!
""""""
விசாரணையென்று போனவர்கள்
வீடு திரும்பினால் ஆச்சர்யம்
சில நேரம் பிணங்களாய்
எங்கேனும் கிடப்பார்கள்
பல நேரங்களில்
இருக்கிறார்களா?
இறந்தார்களா?
என்பதே நீளும் கேள்வியாய்.....
""""
கணவனின் நிலை தெரியாது
கண்ணீருடன் தவிக்கும் பெண்கள்
வாழாவெட்டியாய்,
விதவைகளாய் வடிக்கும்
கண்ணீரில் நான்
கரைந்து கொண்டிருக்கிறேன்!
""""""
பிணங்களை விதைத்து
விதவைகளை காவல் வைக்கும்
கழனியாய் நான்!
"""""
இருவர் சுதந்திரத்தில்
சிக்குண்டு அடிமைப்பட்டது
என் சுதந்திரம்!
"""""
இந்தியாவின் தலையும் நான்
தலைவலியும் நான்!
வலியே
நிவாரணம் தேடும்
வழியில் நான்!
""""""
என் சனநாயகம்
சவப்பெட்டிக்குள்
ஆணி அடிப்பதோ
அணிதிரளும் இராணுவம்!
அடிக்கச் சொல்வது
அரசாணைகள்!
""""""
ஊரடங்கு உத்தரவுகளிலேயே
உயிர் வாழும் ஊமையும் நான்...
குளிர் நீரோடைகளில்
குருதியோட்டம்
காண்பதுவும் நான்!
""""""
நான்
பூக்களின் தேசம்
புன்னகை தொலைத்து!