சிந்தனைகளின் சிரச்சேதம்
சரிவுகளின் ஆழ்ந்த கோணத்தில்,
சிக்கிச் சிதறுகின்றன,
சிகரம் நோக்கி பயணித்த,
சிந்தனை மேகங்கள்.
அலை இல்லா ஆழ்கடலில்
திசை தொலைத்து திரிகின்றன,
பதிக்கப் படாத தடந்தேடி
பாய் விரித்த கப்பல்கள்.
நல்லதோர் விடியல் வேண்டி
நடுசாமம் என்று அறியாமல்,
நாசி நெறித்து கூவுகிறது,
யாரையும் எழுப்பாத சேவலொன்று.
வறட்சி நீண்ட காலத்தில்
நிழல் விரித்து காத்திருக்கிறது,
இல்லாத பயணிகளுக்காய் -
ஆயிரம் இலை மரம்.
நிகழ்காலத் தேவைகளால்
நெடிதுயர்ந்த கான்கிரீட் வயல்களில்,
தொலைத்த மணல் தேடி,
துளைத்து துழாவுகிறது மழை.
உணர்ந்து படிக்கப் படாமல்
உரசி மட்டும் செல்வதால்,
சிரச்சேதம் செய்யப் படுகின்றன,
சீர் திருத்தச் சிந்தனைகள்.