இடைவெளி
அதிகமான நாட்கள் நாங்கள் பேசியிருக்கமாட்டோம்
வீட்டில் தொலைபேசிக் கட்டணம்
அதிகம் வந்திருக்கிறது இம்மாதம்
தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில்
மேசைமீது பேசாமலிருக்கிறது
வீடெங்கும் ஒலி குறைந்த அறைகள்
வளர்ப்புப் பூனைகூட கொஞ்ச நாட்களாகத்தான்
வயிற்றில் கருவினை சுமந்துகொண்டிருக்கிறது
பூனையும் இப்போது பசிக்கும்போது கத்துவதில்லை
அது தாயாகிவிட்டது
பொறுமைத் தாயானது
வீட்டில் எல்லோருக்கும் சந்தோசம்
இந்த இடைவெளியை நரப்புவதற்கு
"இடைவெளி நிரப்புக" என்று எழுதினால் போதுமா?
இந்த சொல்லை என்னாலும் மறக்கமுடியாது
இதைத்தான் நீயும் கடைசிவார்த்தையாக சொல்லிவிட்டுப்போனாய்
பஸ்ஸில் போகும்போது
அடையாள அட்டை தவறியதாகச் சொன்னாய்
நான் நினைக்கிறேன்
இலேசில் நீ வீடுபோய் சேர்ந்திருக்க முடியாது
என் வீட்டு தென்னை மரத்தின்கீழ் அமர்ந்து
இப்போது யாருடனும் நான் பேசுவதில்லை
என்பதை உனக்கு இறுதியாக சொல்லும்
ஒரு வார்த்தையாக வைத்திருந்தேன்
நான் அருந்தும் தேநீரில் யாரோ மூழ்கிக்கிடப்பதுபோலவும்
வழியில் உன்னை நிறுத்தி
நீளமான எமது இடைவெளிபோல இருக்கும் உனது கூந்தலை
அறுத்து வீதியில் குவித்திருப்பதையும் காட்டுது
என் தேநீர்த் தொலைக் காட்சி
மரண அறிவித்தல் இல்லை என்பதால் கொஞ்சம் அமைதி