வா வெண்ணிலா

இடம்: கடலூர் ஆர்ட்ஸ் காலேஜ் .நேரம் சரியாக 9.30 .

கல்லூரிக்குள் எனது காரை மெதுவாக செலுத்திய நான் அதை

ஸ்டாண்டில் நிறுத்திப் பூட்டிவிட்டு இறங்கினேன் .

இன்று கல்லூரியே பரபரப்பாக இருந்தது.இருக்காதா பின்னே. இன்றுதான் ஜூனியர்கள் வகுப்புக்கு வருகிறார்கள்.

அவர்களை ரகளை செய்யவும் ராகிங் செய்யவும் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர் சீனியர்கள்.

அந்தக் கூட்டத்துக்குள் நான் பந்தாவாக நுழைந்தேன்.ஜூனியர்கள் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். நான் சாதாரண உடையிலேயே அழகுதான் என்றாலும் அந்த கருநீல ஜீன்ஸ் வெள்ளை டி ஷர்ட்டில் நான் பேரழகாக இருப்பதாக எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

என்னையே பார்த்தபடி நின்றிருந்த ஜூனியர் மாணவிகளை வரிசையாக வந்து சல்யூட் அடித்து பெயரை சொல்லச் சொன்னேன். ஒவ்வொருவராக பயந்தபடி வந்தனர்.

சல்வார் ,மிடி, சுடிதார் இவற்றிற்கு நடுவில் ஒருத்தி மட்டும் பாவாடை தாவணியில் வித்தியாசமாக தெரிந்தாள்.இந்த மாதிரிப் பெண்களுக்கிடையில் இப்படியும் ஒரு பெண்ணா..? என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் பேச ஆரம்பித்தாள்

"என் பெயர் வெண்ணிலா , பி.எஸ்.சி . மேத்ஸ்" என்றாள்.

"ம்...அப்புறம்?..."

"அப்புறம் என்ன....?"

"அப்புறம் என்னவா...எந்த ஊர், எந்த ஸ்கூல், இதெல்லாம் யார் சொல்றது?"

என் மிரட்டலில் பயந்து போன அவள்

"ஊர் திருவந்திபுரம், படிச்சது கடலூர் கேர்ல்ஸ் ஸ்கூல்ல " என்று கூறி ‘போதுமா.. ‘ என்பது போல் என்னை பரிதாபமாக பார்த்தாள்.

"உனக்கு தாவணி போட யார் சொல்லிக் குடுத்தாங்க?"

'இதெல்லாம் ஒரு கேள்வியா? என்பது போல என்னைப் பார்த்த அவள் சற்று தைரியமடைந்து

"எங்க பாட்டிதான் சொல்லிக்குடுத்தாங்க" என்றாள்.

சுற்றி நின்றிருந்த கூட்டம் கோரசாக "ஓ.." போட அவள் விழுந்தடித்து ஓடிவிட்டாள்.

மாலை

கடைசி பீரியட் முடிந்து வெளியில் வந்த நான் அவள் கண்ணில் படுகிறாளா என்று பார்த்தேன்.

ம் ஹூம் ...அவளைக் காணவில்லை. அலுப்புடன் காரை பேருந்து நிறுத்தத்துக்கு ஓட்டினேன். அங்கே அவள் பஸ்சுக்கு காத்திருப்பது தெரிந்தது. அருகில் செல்வதற்குள் அவள் பேருந்தில் ஏறிவிட்டாள்.

அறைக்குத் திரும்பிய நான் 'அந்தப் பெண்தான் பாவாடை தாவணியில் எவ்வளோ அழகாக இருக்கிறாள்' என்று நினைத்தபடி தூங்கிவிட்டேன்.

விடியல்

எழுந்த நான் இன்று எப்படியும் அவளை இங்கே கூட்டிகொண்டு வரவேண்டும் என்று முடிவெடுத்தேன். அவள் வருவாளா என்று கல்லூரி வாசலில் காத்திருந்தேன். நல்லவேளையாக அவள் வந்தாள். ரோஸ் நிற பாவாடை தாவணியுடன் ஒரு ரோஜாப்பூ போல நடந்து வந்தாள்.

அவள் அருகில் வந்ததும் நான் ஆரம்பித்தேன்.

"ஏய் ரோஸ், நில்லு"

"ம்.. என்ன"

"சாயங்காலம் கிளாஸ் முடிஞ்சதும் என்னைப் பார்த்துட்டுதான் போகணும்.."

"எதுக்கு..?" என்று பயத்துடன் ஆரம்பித்தவள் நான் முறைக்கவும் "சரி" என்று கூறிவிட்டு வகுப்புக்குள் ஓடிவிட்டாள்.

எதற்கும் எச்சரிக்கையாக அவள் வகுப்பறை வாசலிலேயே ஒரு கண் வைத்திருந்தேன். நான் நினைத்தது போலவே ஒரு பிரியட் முன்னதாக வெளியில் வந்தாள்.

நானும் அவள் பின்னாலேயே காரில் தொடர்ந்தேன். பஸ் நிறுத்தத்தில் அவள் நிற்க காரை அவள் அருகில் நிறுத்தினேன். கண்ணாடியை கீழிறக்கியபடி

"நான் காலைல என்ன சொன்னேன்னு மறந்து போச்சா? " என்றேன்.

"இல்லை, எனக்குத் தலைவலி அதான் சீக்கிரம் கிளம்பினேன்" என்றாள்.

"சரி கார்ல ஏறு, நல்ல டாக்டர் கிட்ட போலாம்"

"அதெல்லாம் வேணாம், எனக்கு பஸ் வந்திடும்" என்றாள்.

"என்னது பஸ்ஸா, அது இன்னைக்கு மதியத்திலேர்ந்து ஸ்ட்ரைக், ஒழுங்க கார்ல ஏறு" என்று அவளை வற்புறுத்தி காரில் ஏற்றிக் கொண்டேன்.

காரை நேராக ஒரு பெரிய துணிக்கடைக்கு ஓட்டினேன்.

"என்ன பாக்குறே ,உனக்குப் புடிச்ச நல்ல பாவாடை தாவணியா ஒரு அஞ்சு செட் செலக்ட் பண்ணு" என்றேன்.

என்னை பயத்துடன் பார்த்தபடியே செலக்ட் பண்ணினாள்.

காரை என் அறைக்கு ஓட்டினேன்.

"எங்கே போறீங்க" என்று பயத்துடன் வினவினாள்.

"என் ரூமுக்கு"

"என்னது உங்க ரூமுக்கா, எனக்கு பயமா இருக்கு . நான் வரலை. என்னை இங்கேயே இறக்கி விட்டுடுங்க" என்றாள் மிரட்சியுடன்.

"பயப்படாதே, அங்கே யாரும் இருக்க மாட்டாங்க, எல்லோரும் காலேஜ் முடிஞ்சி படத்துக்குப் போயிட்டு லேட்டாத்தான் வருவாங்க. அவுங்க வர்றதுக்குள்ளே நீ கெளம்பிடலாம்." என்றேன்.

தயங்கித் தயங்கி என்னைப் பின் தொடர்ந்தாள் வெண்ணிலா.

அறைக்குள் நுழைந்த நான் கதவைத் தாழிட்டேன்.


"உன்னை ஏன் இங்கே கூட்டிவந்தேன் தெரியுமா" என்றேன்.

விளங்காமல் பார்த்தாள்

"எனக்கு நீதான் தாவணி கட்டிவிடணும்" என்றேன்.

"ஐயய்யோ ..நானா " என்று திகைப்புடன் கேட்டாள்.

"ஆமாம். பெரிய பணக்கார வீட்டின் ஒரே பெண் என்பதால் என்னை ஜீன்ஸ் பேன்ட் டி ஷர்ட் போட்டே வளர்த்துட்டாங்க. உன்னைப் பாக்குற வரைக்கும் எனக்கு தாவணி போடணும்ன்ற எண்ணமே இல்லை. இப்போ தாவணி போடணும்னு ஆசையா இருக்கு. எனக்கு கட்டி விடறியா" என்று ஆசையாக கேட்டேன்.

"சரிங்க" என்று தயங்கினாள் வெண்ணிலா.

"இதோ பார், வாங்க போங்கல்லாம் இருக்கட்டும். என் பெயர் ரோஷினி. இனிமே நீ என்னை ரோஷினின்னே கூப்பிடு" என்றேன் சிரித்தபடி.

புன்னகையுடன் " சரிங்க ரோஷினி" என்று கூறிய அவள் மகிழ்ச்சியுடன் பாவாடை தாவணி பார்சலை பிரிக்க ஆரம்பித்தாள்.

நன்றி ;நிலாமுற்றம்
ரோஜா

எழுதியவர் : கே இனியவன் (17-Nov-13, 1:51 pm)
பார்வை : 168

மேலே