காகம் கரைந்த பொழுது ரோஷான் ஏஜிப்ரி
முருங்கை போட்டு முறிக்காமல்
என் தலையில் வந்து நின்று கத்து
வயிற்றில் சுமந்த பாரத்தை
இங்குதானே அவர்கள்
இறக்கி வைக்கிறார்கள்
நீ-கத்திக் கரைந்து,தெத்தித் திரிந்து
ஆருடம் கூறுகிறாய்
நான்-கவலையில் உறைந்து
கண்ணீரில் கரைந்து
வேறிடம் தேடுகிறேன்
முந்தானை முடிச்சில் இருந்த
நாலு பணத்தை முடிச்சி வைத்தவர்கள்
அவர்களை ஏணியாய் ஆக்கி
நான் தரிசு காணியாய் கிடக்கிறேன்
இப்பவும் என்னில் அடிவைத்துதான்
ஏறி மிதித்து மேலே ஏறுகிறார்கள்
உனக்கென்ன பொல்லாவலாய்
போனமுறையும் நீ
தெத்தி,தெத்தி கத்திய அன்றுதான்
குஞ்சி குரானோடு அவர்கள் வந்து
பிஞ்சி,முத்தல் எல்லாம் பிச்சி
என் பயிர் நிலம் மேய்ந்து
ஆனை திண்ட சேனையாய் ஆக்கி
அன்றாடம் காச்சியை
தினம் திண்டாடும் பேச்சியாய்
தெருவில் விட்டவர்களா
திரும்பவும் என் திசையில்?
வாழ்க்கைக்குள் போனபின்
வாசலை பெருக்குகிறார்கள்
வசதியை பெருக்குகிறார்கள்
வீடு கிடக்கிறேன்
பயன் அற்ற பாத்திரமாய்
என் குருவிக் கூட்டு கனவை
கொல்லைப் புறத்துக்கு தள்ளியது
இந்த பிள்ளைப் பிரப்புகள்தான்
கரைகிற உனக்கு தெரியுமா என் கவலை?
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.