கருவுக்கு தாலாட்டு
கருவுக்கு தாலாட்டு
கருவே !! உயிரே !! அலரும் மலரே !!
உலகே உந்தன் தாயின் வயிறே
திரவம் நிறைந்த பையில் சிசுவே...
நீந்தும் கருவே தினமும் வளர்வாய்
கருவே வளர்வாய்...சுகமாய் துயில்வாய்...
உணவும் மூச்சும் தரமாய்ப் பெறவே
இறைவன் அமைத்தான் தூய்மை அறையை
உருண்டும் புரண்டும் ஊர்ந்தும் திறிவாய்
சுருண்டு நீண்டு வடிவம் பெறுவாய்
கைகால் முளைக்கும் கண்கள் விரியும்
கருவே வளர்வாய் ..சுகமாய் துயில்வாய்....
எலும்பும் மூட்டும் வலிமை அடையும்
உருவும் பெருகும் அறிவும் துளிரும்
அதிர்வும் அசைவும் அறியும் பருவம்
இசையும் உணரும் குறும்பும் அரும்பும்
தொப்புள் கொடியை சுற்றிச் சுழலும்
விரல்கள் விரித்து முகத்தை தடவும்
கருவே வளர்வாய்.. சுகமாய் துயில்வாய்...
குழந்தை வடிவம் முழுமை அடையும்
தலையை அசைக்கும் தாயை உதைக்கும்
உள்ளே இருந்து விடுதலை கேட்கும்
வழியைத் தேடி, தாய்க்கு வலியும் கொடுக்கும்
கருவே வளர்வாய் .... சுகமாய் துயில்வாய் ...
குழந்தாய் கேளாய் நீ வெளியே வந்தால்,
அம்மா மகிழ்வாள்.. அப்பா நெகிழ்வார் – உன்
தாத்தா பாட்டி கொஞ்சி சிரிப்பார் - உனக்கு
வயிறு பசிக்கும் அழுகை வரும்
உடம்பு சிலிர்க்கும் போர்வை கேட்கும்
சொந்தம் பார்க்கும், கிள்ளி வைக்கும் - உன்
அழுகை கேட்டு சிரித்து போகும்
பிணிகள் தடுக்க ஊசிகள் குத்துவார்
பிள்ளாய் கேளாய் ... படுவாய் துயர்கள்...
உதட்டு விளிம்பில் தாய்ப்பால் வழியும்
காட்சிகள் இங்கே கனவாய்ப் போனது
காற்றும் நீரும் வெளியல் அழுக்கு – இது
கருவரை அல்ல கழுசடை உலகம்
ஒலியும் அதிர்வும் உலுக்கிக் குலுக்கும்
மொழியும் மதமும் மூளையை கசக்கும்
பிள்ளாய் கேளாய் --- படுவாய் துயர்கள்
தந்தையும் தாயும் பணிக்குச் செல்வார் – நீ
தனியே விழிப்பாய் சுவர்களைப் பார்த்து
ஆண்டுகள் இரண்டு முடியும் முன்னே - உன்னை
வாண்டுகள் கூடும் பள்ளியில் சேர்ப்பர் – உன்
மழலைக் குரலை மாற்றித் திருத்தி
வேற்று மொழியை மூளையில் திணிப்பர்
பிள்ளாய் கேளாய் ... படுவாய் துயர்கள்
பள்ளிகள் மாற்றி மொழிகளை மாற்றி
புத்தகச் சுமைகள் வித்தகக் கலைகள் என,
பிள்ளைகள் வாழ்வு நசுங்கிப் பிதுங்கும் – பின்
கல்லூரி... காதல் ... பணி ...பயணம்
விலைவாசி... வாழ்க்கை ...கடன்... சுற்றம் .. நட்பு
போதுமடாஆஆஆஅ சாஆஆஆமீஈஈஈஈஈ
பிள்ளாய் கேளாய் ... படுவாய் துயர்கள்
கருவாய் நிலைப்பாய்.. கடைசி வரைக்கும்
உரு மாறித் தெரியாமல் போன ... ஜ. கி. ஆதி