தோழமை நெஞ்சங்களே இதை வாசியுங்கள்5

விடியும் பொழுதுக்கு
என்ன சொல்லி
விடை பெற்றிருக்கும் இரவு..?

களைத்துப்போன உலகத்தை
தழுவி தாலாட்டி
அயற்சியைப் போக்கிவிட்டேன் - இனி
நீ தட்டியெழுப்பி
கடமையை செய்ய கைகொடு...
இரவுக்கும் பகலுக்கும்
இடையிலான நமது ஒப்பந்தம்
இனிதே நிறைவேறட்டும்.......

மலர்ந்து உதிரும் மலரிதழ்கள்
என்ன சொல்லி
செடியிடம் விடை பெற்றிருக்கும்..?

அழுது அழுது
அலுத்துப்போகிற இவ்வுலகில்
சிறிது காலமேயானாலும்
சிரித்தே வாழ்ந்து பழகிவிட்டோம்;
திரும்பவும்
மலர்களை மலரச்செய்யும் தாய்மையே
மரணமுமொரு அங்கமென்று
இம்மானிட பிறவிக்கு தொடர்ந்துனர்த்து....

உயிர் எதைக் கூறிவிட்டு
விடை பெற்றிருக்கும்
உடலிடமிருந்து..?

எனது துடிப்பும் இயக்கமும்
இம்மனிதருக்கு
சாதனைகொள்ள செய்ததோ இல்லையோ...
எனக்கான காலமும் கடமையும்
முடிந்துவிட்டது;
இனி விடைபெறுவோம் என்றே
விடைபெற்றிருக்கும்.....

மேலே என்ன சொல்லிவிட்டு
கீழியிறங்கிருக்கும் மழைத்துளிகள்..?

ஆவியாய் அலைந்து
அண்டம்பல கடந்து
சுயநல சுயற்சியோடு
சுடுகாடு செல்வதா....?
இதோ...
அழுதே கரைகிறேன்
ஆனந்தம் கொள்ளட்டும் அகிலம்....

நிலா இல்லாதபொழுது
விண்மீன்களிடம்
என்ன சொல்லியிருக்கும் வானம்..?

வைரமும், தங்கமும்
பவளமும், முத்துமாகிப்போன - எனது
அலங்கார அணிகலன்களில் - யாரோ
திருடிவிட்டார்கள்!- எனது
நெற்றிப்பொட்டை
என்றே புலம்பி இருக்கும்...

ஊழல் புரிபவனின் உள்மனம்
என்ன சொல்லிக் கொண்டிருக்கும்
சிக்கிடும் போது..?

ஊரையடித்து உலையில்போட்டு
உண்டுதான் மகிழ்ந்தோரிலே
தானொருவன் சிக்கினாலும்
ஊழலென்ன ஒழிந்திடுமோ....?
என்றுதான் உளறிக்கொள்ளும்
ஊழைவாதி மனதுமய்யா....

சரியில்லாதவனுக்கு
வாக்காளன் வாக்களிக்கும் போது
வாக்குச்சீட்டு என்ன சொல்லியிருக்கும்..?

வழக்கமான வழக்கு இது;
வாக்குச்சீட்டு வாயடைத்து
ஊமையாகத் தானிருக்கும்!
நம்மையெல்லாம் எண்ணிப்பார்த்து
தனக்குத்தானே தலைகுனியும்....

எழுதிமுடிக்கப்பட்ட எழுத்துகள்
விரல்களிடம்
என்ன சொல்லி நீங்கியிருக்கும்...

தாய்மொழியில் எழுதிவிட்டாய் - என்னை
தரணியிலே தவழவிட்டாய்;
ஈன்றெடுத்த கடமைசெய்ய
விடைகேட்டே விரும்பிநிற்கும்...!!!

அன்பானவர்களே கவிதை என்பது எவருக்கும் தோன்றும்...ஊறும்...அன்றியும் ஒரு தலைப்பின் கீழ் படைப்பது என்பது பயிற்சியின் விளைவெனில் சிறப்பு அதிகம்..இவ்வகையில் ஒரு முயற்சி - இந்த வினா விடை படைப்பு...

முக்கிய குறிப்பு :
நிலா சூரியனும் நானும் முன்கூட்டி இது குறித்து எந்தவொரு முன் உரையும் நிகழ்த்திக் கொள்ளவில்லை என்பது முக்கியமாக தோழமைகள் உணர்தல் நன்று...

அன்புடன் அகன் - நிலா சூரியன் .

எழுதியவர் : அகன்-நிலா சூரியன் (18-Nov-13, 7:10 pm)
பார்வை : 205

மேலே