நீ இல்லாத நாட்கள்

பூக்கள் உதிர்ந்த காடாக
கிடக்கிறது நந்தவனம்.

கோடையாய்
சுடுகிறது இளவேனில்,

கருப்பு ஆடையில் வந்து
ஹர்த்தால் நடாத்துகிறது
வெண்ணிலவு.

தரையில் விழுந்த மீனாய்
துடிக்கிறது நட்சத்திரங்கள்.

அமில மழையில்
குளித்து வருகிறது தென்றல்

உன் ஞாபகக் குளத்தில்
மூழ்கி எழுந்து
நிலவின் சூட்டில்
உலர்த்திக் கொள்கிறேன்,

நானே கதவைப் பூட்டிவிட்டு
கைக் காட்டிவிடுகிறேன்
நீ வாசலில் நின்று
கொண்டிருப்பதான நினைவில்.

உன்னுடன் பேசுவதற்காக
கைப் பேசிஎன்று எண்ணி
ரிமோட் கண்ட்ரோலை
காதில் வைத்து விடுகிறேன்.

அலுவலகம் முடிந்து
சாலை கடக்கும் வேளைகளில்
அய்யா.. அம்மா வந்துட்டாங்களா
என்னும் பூக்காரியின்
கேள்வியில் நொடிந்து போகிறேன்

நம் வீட்டு சமையல் கட்டில்
குடித்தனம் நடத்துகிறது எலி.
காவலுக்கு பூனை.

வாசல் திறக்கும்போது
ஓடிவந்து தாவிக்குதிக்கும்
நம் வீட்டு நாய்கூட
உன்னை அழைத்து வராத
கோபத்தில் எனக்கு
வாலாட்ட மறுக்கிறது.

வீடு முழுக்க
பொருட்களையும்
பொருட்கள் கொண்டுவந்த
விலையில்லாப் பொருட்களையும்
நிறைத்து வைத்திருந்தும்
நான் மட்டும்
வெறுமையாய் இருக்கிறேன்
நீ இல்லாத இந்த
நரக நாட்களில்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Nov-13, 10:02 am)
Tanglish : nee illatha nadkal
பார்வை : 1475

மேலே