பதாதைகளில் சாகும் புரட்சி

துயரங்களை மொழிபெயர்த்து முழங்கிக் கொண்டிருந்தது வானம்
அந்த முழக்கத்திலிருந்து முனை மழுங்காமல்
மலையொன்றில் வீழ்கிற சபிக்கப்பட்ட வாழ்வின் ஏக்கம்
என்னுடையது மட்டுமன்றி தேசமற்ற எல்லோருடையதும்

ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க
அகதியெனும் பெயரோடு தொப்பூள்கொடி மண்ணில்
போலீஸ் பதிவுகளை நிரப்பிக்கொண்டிருக்கிற
எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை

முகவரிகள் தேடிச் செல்லும் நாடற்றவர்களின் நாட்கள்
வீடற்று அலைவதில்அபூர்வமில்லை
கேரளத்திலிருந்து வந்தவன் மலையாளி
ஆந்திராவிலிருந்து வந்தவன் தெலுங்கன்
இப்படியாக
வேறு மொழி பேசுகின்ற அனைவரும் மொழியின் பெயரால்
அழைக்கப்பட நாங்கள் அகதிகளென தூற்றப்படுகிறோம்

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவோம்
அவர்கள் எமது தொப்பூள் கொடிகளென
சுயநலங்களோடு ஒலிவாங்கியில் நடக்கும் புரட்சி
இரவைக் கிழித்து எனது இருள்மைக்குள் வீழ்கிறது

அதிகாரப் பிரிவுகள் எங்களை நோகடித்து
பயங்கரவாதிகளென வன்மம் தீர்க்கிறார்கள்

பதாதைகளில் தொங்கும் எமக்கான தேசபிதாவை
கொள்வனவு அரசியலில் விளம்பரப் பொருளாக்கி
நாடற்ற மக்களின் துயர் பாடி
வீடு வாங்கி கொண்டிருக்கின்றனர் பதாதை புரட்சியாளர்கள்

மானுடத்தை கொலை செய்த ஆசிய கிட்லரை பார்க்கிலும்
இவர்கள் அருவருக்கத்தக்கவர்கள்.

வலைகளற்ற திருட்டுச் சிலந்தியென
தரையில் நடந்து கொண்டிருக்கிற நான்
வீழ்ந்தொளுகும் மின்னல் கீற்றுகளின் வெளிச்சத்தில்
எனக்கான இடம் இங்கு இல்லையென்பதில் தெளிவாகிறேன்.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (21-Nov-13, 4:33 pm)
பார்வை : 95

மேலே