தாய்மை

அம்மா ! உன் பெருமை
நான் அறிய உதவியது
இந்த மகப்பேறு !

குழந்தை முகம் பார்த்த பின்
பிரசவ வலி எல்லாம்
மறந்துவிடும் என்கிறார்கள் !
ஆனால்...
குழந்தை வளர்த்துப் பார்த்த பின்தான்
உன் வலி புரிந்ததம்மா !

என் குழந்தை
ஒவ்வொரு நொடியும் ,
உன்னைத்தான்
நினைவுபடுத்துகிறான்!

அவனைத் தூக்கும் போதும்
கொஞ்சும் போதும்
அணைக்கும் போதும்
முத்தமிடும் போதும்
மட்டும் அல்ல ...

உன் கோபத்தைக் கூட
துல்லியமாய் ,
உணர வைத்திருக்கிறான் !

சுருக்கமாய் சொன்னால் ,
அவனால் என்னில் நான்
உன்னை காண்கிறேன் !

அவன் அம்மா... என்று
அழும்போது ,
அவனோடு சேர்ந்து
எனக்கும் ஏனோ
காரணம் இல்லாமல்
கண்களில் கண்ணீர்
அரும்புகிறது ...

ஆமாம் தாய்மையை
தாராளமாய் கற்றுத் தந்துவிட்டதே
இந்த கன்று !

இறைவனின் படைப்பை
வியக்கிறேன் !

ஒன்றும் தெரியாமல்
பிறக்க வைத்தான் !

பாசத்தை கற்க
உன்னைக் கொடுத்தான் !

விட்டுக்கொடுப்பதைக் கற்க
உறவைக் கொடுத்தான் !

நல்லதைக் காண கல்வி
அறிவைக் கொடுத்தான் !

உலகை உணர
விடுதியில் சேர்த்தான் !

உன் உழைப்பை உணர
உழைக்க வைத்தான் !

காதலை உணர
கணவனைக் கொடுத்தான் !

குறையை சுட்ட
சுற்றத்தைக் கொடுத்தான் !

தாய்மை கற்க
மகனைக் கொடுத்தான் !

வலிகளைப் பொறுக்க
வேதனைகள் கொடுத்தான் !

கடைசியில் உனக்கு ஒன்றுமில்லை
என்பதை
உணரவா உன்னை எடுத்தான் !
உண்மை புரியவில்லை !
ஆம் ! இறைவனை வியக்கிறேன் !

எழுதியவர் : வெற்றிமகள் (21-Nov-13, 4:40 pm)
சேர்த்தது : vetrimahal
Tanglish : thaimai
பார்வை : 87

மேலே