விளையாட்டு மைதானம்---அஹமது அலி---

நான்
மிதித்து விளையாடிய புற்கள்
அனல் சுடரில்
கருகியிருக்குமா?
ஆடு,மாடுகள்
மேய்ந்திருக்குமா?
*)))
எனது
ஓட்டத்தின் போது
நான் வாங்கிய மூச்சுகள்
எத்திசையிலிருந்து வந்திருக்கும்?
நான் விட்ட மூச்சுகள்
எத்திசை நோக்கி போயிருக்கும்?
*)))
நான்
விழுந்து புரண்ட தடங்களை
புழுதிகள் சிதைத்திருக்குமா?
புதிய வீரர்கள் காலில்
துடைத்தெடுத்திருப்பார்களா?
*)))
நான்
உதைத்த கால்பந்துகள்
உடைந்து புதைந்திருக்குமா?
மீண்டும் வந்து என்னையே
உதைக்க வருமா?
*)))
எனது
மட்டையில் பட்டுத் தெறித்த பந்துகள்
உருண்டு கடந்த நான்குகளையும்
உயரப் பறந்த "ஆறு"களையும்
எல்லைக் கோடு எண்ணியிருக்குமா?
என் ஆட்டத்தில் லயித்து
எண்ண மறந்திருக்குமா?
*)))
நான்
விளையாட்டுக்களில் நண்பர்களோடு
போட்ட சண்டைகளை
சுற்றுச் சுவர் பார்த்து சிரித்திருக்குமா?
வெட்டிப் பயல் என
திட்டித் தீர்த்திருக்குமா?
*)))
நான்
பெற்ற காயங்களையும் வலிகளையும்
ஒற்றை மரம் இன்று விவரிக்குமா?
காற்றில் இலையசைத்து
நலம் விசாரிக்குமா?
*)))
நாள்தோறும்
களம் கண்ட என் கால்களை
இப்போதும் விளையாட அனுமதிக்குமா?
சிறார்கள் படையுடன் சேர்ந்து
வெளியில் நிறுத்துமா?
*)))
நான்
பெற்ற வெற்றிகளுக்காக
என்னை வாழ்த்தியிருக்குமா?
வெற்றியை தவற விட்ட தோல்விகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்குமா?

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (27-Nov-13, 7:42 am)
பார்வை : 734

மேலே