நான்மணிக்கடிகையில் பஃறொடை வெண்பா - பகுதி 2

இன்னிசை வெண்பா:

வெண்பாக்களில் நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாக்கள் ஆகும்.

இன்னிசை வெண்பாவில், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகள் அமையுமானால், இரண்டாவது அடியில் தனிச்சொல் வராது. ஏனைய அடிகளில் வரலாம்.

இரண்டாவது அடியில் தனிச்சொல் வந்தால், வெண்பா ஒரே வகையான எதுகையைக் கொண்டோ, இரண்டு வகையான எதுகைகளைக் கொண்டோ வராது. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட எதுகை வகைகளைக் கொண்டு அமையலாம்.

கீழே உள்ள பாடல் இரண்டு வகையான எதுகைகள் அமைந்தும், இரண்டாவது அடியில் தனிச்சொல் வராமலும் அமைந்துள்ள இன்னிசை வெண்பா வாகும்.

”கன்னியப்பன் சந்திரா கண்ணிமையாம் நல்வேதம்
தன்னிகரில் லா,மணியன் தக்க துணையானாள்:
எம்பெருமான் தண்ணருளால் எல்லா நலத்தோடும்
அம்புவியில் வாழ்க அறிந்து”
– சிவனார் (முனைவர் ச.சாம்பசிவனார்)

கீழே உள்ள பாடலில் இரண்டாம் அடியில் ‘இல்லார்’ என்னும் தனிச்சொல் வருகிறது. எனினும், முதல் இரு அடிகளிலும் எதுகைத் தொடை அமைந்து இருக்க மூன்றாம், நான்காம் அடிகள் எதுகையின்றி அமைவதால் இப்பாடல் மூன்று விகற்பம் உடையதாக ஆகிறது. இரண்டாம் அடியில் தனிச்சொல் இருந்தபோதும், இரண்டுக்கு மேற்பட்ட விகற்பங்கள் அமைவதால் இது இன்னிசை வெண்பா ஆகிறது.

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமும்
தலைவணங்கித் தாழப் பெறின். 15
நீதிநெறி விளக்கம்

கீழே உள்ள பாடலில் இரண்டாம் அடியில் தனிச்சொல் இல்லை. எனினும், முதல் இரு அடிகளிலும் எதுகைத் தொடை அமைந்து இருக்க மூன்றாம், நான்காம் அடிகள் எதுகையின்றி அமைவதால் இப்பாடல் மூன்று விகற்பம் உடையதாக ஆகிறது. இரண்டாம் அடியில் தனிச்சொல் இல்லாமலும், இரண்டுக்கு மேற்பட்ட விகற்பங்கள் அமைந்தும் இது இன்னிசை வெண்பா ஆகிறது.

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்
குற்றந் தமதே பிறிதன்று முற்றுணர்ந்தும்
தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா
ஏதிலரை நோவ தெவன். 24 - நீதிநெறி விளக்கம்

கீழே காணும் பாடல்களில் நான்கு வரிகளிலும் ஒரேவகை எதுகைத் தொடை அமைந்து ஒரு விகற்பம் கொண்டதாக இருப்பினும், இரண்டாம் அடியில் தனிச்சொல் எதுவும் இல்லை. ஆதலால் இப்பாடல்கள் இன்னிசை வெண்பாவாகின்றன.

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி. 151 - அறநெறிச்சாரம்

”விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்ற றுவிக்கும்
பதியது வல்விட்ட தந்தமு மாமே” 2955 - திருமூலர்

(தொடரும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-13, 8:52 am)
பார்வை : 109

மேலே