எதுவும் இல்லை

நாளைகளை நோக்கி
நகரும் காலங்கள்.
ஒளியில்பாதி இருளில் மீதி
விதியின் பாதையில்
விரையும் கால்கள்.
ஏன் வந்தோம்
எங்கு செல்கின்றோம்.
சிந்தனை முடிச்சுக்களில் ஆயிரம்
கேள்விகள்.
எத்தனிப்புகள்எதிர்பார்ப்புக்கள்
இடறி வீழ்த்தும் ஏமாற்றங்கள்.
எட்டி மிதித்து முன்னேற
முயலும் போது
இழுத்து அமிழ்த்தும்
சேற்று நிலங்கள்.
சோர்ந்து பின்வாங்கும்
கால்களை நகர்த்தும்
நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள்.
சுழலும் காலங்களுடன்
கலையும் கணப் பொழுதுகள்.
காற்றாய் கலைந்து
கடந்து போன இளமைகள்
வாக்கியங்களுக்குள்
வசப்படாத வார்த்தைகளாய்
விலகிச்செல்ல,
வானவில்லை வளைத்து
பெட்டியில் வைத்து
தொலைந்த வண்ணங்களைத்
தேடும் ஓவியனாய்....
மீதமுள்ள நாட்கள் கைபிடித்து விலக
பயணிக்கின்றேன்.
வாழ்க்கையின் பாதையில்
சொந்தம் பந்தம் சலிப்பு சந்தோசம்
சுயத்தைக் காக்கும்போலி முகங்கள்.
அதிகாரங்கள் உரிமை மறுப்புக்கள்.
அடிமையாக கிடக்கும் உணர்வுகள்
வெண்ணயாய் திரண்டு தாழியில்
தொலைந்த விடுதலைக் கனவுகள்.
வறண்ட எச்சில் நீர் விழுங்கி
ஊமையாய் வாய் மூடிய அவலங்கள்.
மனப்பானையில் மூடப்பட்டு
கரைகின்ற கண்ணீரால்
அவியும் கொந்தளிக்கும் உணர்ச்சிகள்.
ஏதோ பேசி எதையெல்லாம்
சாதித்து இறுதியில் இருந்ததையும் இழந்து
வெறுமனே பிறந்த மண்ணில் பரதேசியாய்
பயணம் முடிக்குக் போது
என் தாய்மண் என்னிடம் கேட்கும்
ஏன் நீ வந்தாய் எதை நீ சாதித்தாய் என்று!

எழுதியவர் : சிவநாதன் (29-Nov-13, 12:17 am)
Tanglish : ethuvum illai
பார்வை : 103

மேலே