ஒருதலைக் காதலன்
உன்
உதடுகளின் உறக்கம்
மலர்வித்த மெளனப்பூ
வாசம், அதை
அபகரித்து வந்த தென்றல்
வாசிப்பதென் செவியினில்,
அது விழுந்த நொடியில்,
நேசிப்பின் நெகிழ்ச்சியில்
சுவாசிப்பும் மறந்திருந்த
நான்,
நினைவலை எழுப்பும்
அவளென்ற கடலினுள்
இருந்து எழுகிறேன்.
“செம்பருத்தி போன்ற இதழ்
அதன் மறைப்பில் இருந்த,
பருத்தி வெண்மையில்
பவளமாய் ஒளிர்ந்திடும்
பற்கள் தெரியும்
சிரிப்போடும்
சிவந்த நாவும் சுவைக்க
வரம் கேட்ட வார்த்தைகள்
கொண்டு வரைந்த
உன் காதலை தீட்டிடு!”
என்றே என் மனமேங்கியது.
ஏதோ சிந்தனையில் என்
கை விரல் கடித்தும்
கால் விரல் மண் கீறவுமாய்
கனவுக்குள்ளும் கற்பனையில்
காத்திருக்கிறேன்,
உடையாத மல்லிகை மொட்டாய்
உருவிலும் ஒன்றாக
உத்தேசித்து.
அழகால், ஆசையால்,
இன்பமாய் ஈர்த்தவள்
உள்ளத்தினுள் ஊர்ந்திட
எல்லாமவளாய் ஏனோ
ஐக்கியப்படுத்திட,
ஓயாத அவள் நினைவில்
ஒருதலைக் காதலன்.