பழைய நினைவு
ஏழாம் வகுப்பு
ஆரம்ப நாட்கள்
நினைவுகள் துளிர்கிறது...
ஏதும் அறியாத
அறிந்ததை மறவாத
தெளிந்த வயது...
ஞாபகம் வருகிறது
நான் பயின்ற
அரசு மேனிலைப்பள்ளி,
இலங்கை அகதி
நாங்களிட்ட பெயர்
மெய்யாக மலர்விழி,
அழகோடு அறிவும்
எங்களை விட
நிறைவாகவே இருந்தது...
ஆசிரியர் கேட்கும்
எந்தக் கேள்விக்கும்
முதன் பதிலாளி ...
உங்கள் நாட்டிலிருந்து
ஏன் வந்தீர்கள்
என்று கேட்டேன் ...
அதற்கு அவள்
சமர் நடக்கின்றது
என்பதால் வந்துவிட்டோம்.
அவள் பேசிய
ஈழத் தமிழ்
பொருள் படவில்லை...
சமர் என்றால்
பொருள் என்ன
என்றேன் நான்...
சமரென்றால் போர்
எண்கள் படையே
எங்களை அழிக்கும்...
எங்கள் பள்ளியிலும்
குண்டுகள் விழுந்தது,
ஊரும் அழிந்தது...
துப்பாக்கித் தோட்டாக்கள்
எப்பொழுதும் வெடிக்கும்
கரும்புகையாகவே இருக்கும்.
வீடும் காடும்
நாடும் உண்டு
இப்பொழுதோ ஏதிலி.
என்னுடைய தாயும்
தந்தையும் இங்கே
கூலித் தொழிலாளி.
இந்த வாழ்க்கை
எத்தனை காலம்
நாங்கள் அறியோம்.
அவர்களின் பேச்சி
பொருள் படவில்லை
சில நாட்கள்.
பின்னர் நண்பர்களாய்
கூட்டாஞ்சோறு
பரிமாற்றங்களும் நிகழ்ந்தது.
அவளுடன் நாங்கள்
கழித்த காலம்
மூன்று மாதங்கள்...
காலண்டுத்தேர்வும்
அரையாண்டுத்தேர்வும்
எழுதி முடித்தோம்.
வந்த விடுமுறையில்
காணாமல் போனாள்
ஈழத்து நண்பர்களுடன்...
செய்தி கேட்டவன்
அதிர்ந்தேன் - நண்பனுடன்
மிதிவண்டியில் பறந்தேன்.
ஊருக்கு வெளியே
அந்த அகதிமுகாம்
வெறிச்சோடியே இருந்தது.
இனிமேல் காண
இயலாதென்ற ஏக்கம்
கண்ணீரை வரவழைத்தது.
அந்தக் காட்சிகள்
பழைய நினைவுகளாய்
நெஞ்சில் புதைந்தேயிள்ளது.