EID MUBARAK MUSICAL CARD
இழுத்து அடைத்துக்கொள் மெதுவாக
இந்த இசைபாடும் அறையின் கதவினை
இதயம் என்பது சில நேரங்களில்
அடைத்துவைக்கப்படவேண்டிய ஒன்றுதான்
என்கிறபடியால்,
சென்ற வருடம் இதே நாளில்
நீ பேசிய வார்த்தைகள்
களள்ளப் பூனைபோல் எட்டிப் பார்க்கும் வெயியே
என்கிற படியால்
இழுத்து அடைத்துக்கொள்
இந்த இசை பாடும் அறையின் கதவினை
மருதாணிப் புள்ளிகள் அமர்ந்திருக்கும்
உன் கரங்களில்
ஈச்சம் பழம் ஏந்தி வா
சுவைத்துவிட்டு பள்ளிவாசல் சென்று நான் தொழ
அன்றைய தினத்தில்
எந்தன் புது ஆடை மணக்கவில்லை
உன்னை விட
எந்த மிட்டாயும் இனிக்கவில்லை
உன் பார்வைகளை விட
கடித உறையொன்று உதடு விரிக்கிறது
உன் புன்னகையினை ஞாபகப்படுத்தி
நோன்பு இருபத்தேழில்
உன்னைப் பெண் பார்க்கவருவதாகவும்,
பெருநாள் முடிந்த கையோடு
உனக்குத் திருமணம் என்றும் எழுதியிருந்தது
அந்த கடிதத்தில்
என் வீட்டு கட்டிலுக்கு கீழ் உள்ள பாத்திரத்தில்
வாழைப் பழத்தோடு கொட்டி வைத்திருக்கிறேன்
உன் முகத்தையும், பெருநாள் உடுப்பையும்
விடிந்தால் நோன்புப் பெருநாள்
வரவா உன் வீட்டிற்கு
பசு மாட்டிற்கும்
கோழிக் கறியுடன்தான் சோறு கொடுப்பாயாமே நீ