தாயும் கன்றும்

சிமிட்டித் தெருவில்
வந்து கொண்டிருந்த கன்றுக்குட்டி
வீட்டின் முன் நின்றது.
கழுத்தை நீட்டி, நாக்கை நீட்டி
அம்மே என்று அழைத்தது.

எதிரே
அன்னந்தொங்கலோடு வந்த ஒரு பசு
செல்லமாக முட்டியது;
எங்க போயிட்டா ஒங்க அம்மா?
இப்பிடிக் கூவுற!

இரண்டும்
எதிர் எதிர்த் திசையில் போய்விட்டன
என் எண்ணங்கள்
ஒரு திசையில் சென்றன.

இந்த மாதிரியான பின் மாலைகளில்
வீதிக்கு வந்து என்னைத் தேடியவள்
பிடித்த கையை விடாமல் இழுத்து வந்தவள்.
அப்பா வீடு திரும்பியதும்
புகார் சொல்வாள்.

இருக்கிற மனநிலைக்கு ஏற்ப
இரண்டு வைப்பார்.
அழுதுகொண்டே
சிம்னி விளக்கின் முன் குனிந்து
எழுதுகையில்
சாமிக்கு எடுக்காத தலைமயிர்
பொசுங்கும்.

இந்தக் கன்றுக்குட்டி வளர்ந்து
உழவுக்கு வண்டிக்கு
உதவ வேண்டும் என்று எதிர்பார்த்தவர்கள்.
கட்டி அடித்துவிட்டு
அப்பா போய்ச் சேர்ந்துவிட்டார்.
காற்றுக்காக வீட்டின் முன் அம்மா
கால்நீட்டி உட்கார்ந்துகிடப்பாள்.

கன்றுக்குட்டி திரும்பி வந்து
மீண்டும் நின்றது: அம்மே!
அன்னந்தொங்கல் பசுவும் அப்படியே வந்தது.
அவ அங்க நின்னுகிட்டுத் தேடறா
நீ இங்க நின்னுகிட்டுக் கூவுற?
மீண்டும் செல்லமாக முட்டியது:
அய்யோ அம்மாவ!
அய்யோ புள்ளய!

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (7-Dec-13, 12:41 pm)
சேர்த்தது : KRISHNAN BABU
பார்வை : 109

மேலே