பொறியியல் பொறுக்கிகள் குமார் பாலகிருஷ்ணன்
வகைவகையாய் தானியங்கிகள்
கண்டறியப் புறப்பட்டு,
கடைத்தெருவில் விற்காத
தானியங்கள் நாங்கள்…
உலகையே மாற்றிவிடத் துணிந்து
உலோகச் சிரால்களிடையே
சிக்கித் தவிக்கும்
எஃகு தட்டுகளின்
நெளிவு சுளிவு சரிசெய்யும்
கழிவுகள் நாங்கள்
ஊருக்கே வெள்ளையடிக்க நினைத்து
துருப்பிடிக்காமல் இருக்க
வாகன உதிரிப்பாகங்களுக்கு
வேதிச் சாயம் ஏற்றும்
இத்துப்போன சாதி நாங்கள்
உலோகங்களை உருக்கி
வார்ப்பில் ஊற்றி
வார்த்தெடுத்த பொருள்களின்
கடினத்தன்மையைவிட
கடினப்பட்டுக் கிடக்கிறது
கமழ இயலாத இந்த
கமலங்களின் இதயம்
எண்ணெய்பசைக் கரைகளுடன்
எந்திரங்களின் கதகதப்பில்
சந்திரோதயம் காணும்
எங்களின் வியர்வையின்
வெப்பத்தில் குளிர்விப்பான்களும்
ஆவியாகி விடுகின்றன
இவ்வாறு
சக்கரம் கண்டறிந்த
நாளிலிருந்து சுழன்று
கொண்டிருக்கும்
எங்கள் உழைப்பை
ஜெர்மனுக்காகவும்
ஜப்பானுக்காகவும்
அமெரிக்காவுக்காகவும்
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன
இந்திய அட்டைப்பூச்சிகள்….