கூந்தல் அழகி
1.
உன் முகம் பார்க்க
நானும் உன் கூந்தலும்
ஒரு சேர வருகிறோம்.
முடியை ஒற்றை விரலாலும்
என்னை ஒற்றை கண்ணாலும்
ஒதுக்கி விடுகிறாய்.
2.
கருப்பு அருவியாய்
கூந்தலை அவிழ்த்துவிடுகிறாய்
நீச்சல் தெரியாத நான்.
3.
"அவள் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உண்டா?"
முட்டாள் தனமான கேள்வி.
இயற்கைக்கு மணம் வந்ததே
அவள் கூந்தலில் இருந்து தான்.
4.
நீ தலையை வாறும்போது
விழும் முடியிடம்
கேட்டால் தெரியும்
சொர்க்கத்திற்கான வழி.
5
"மயிரா போச்சு"னு
சொல்கிற எவனும்
தன் காதலியின்
மயிரை சொல்வதில்லை.
6.
உன்
உதிர்ந்த முடிகளை
எடுத்து புத்தகத்தில்
வைத்துக் கொள்கிறேன்
என்றாவது குட்டி போடலாம்!
7.
நீ
குதிரைவால்
என்று தான் போடுகிறாய்
ஆனால் யானையின் தும்பிக்கையாய்
என்னை தூக்கி அடிக்கிறது
அது.
8.
உன்
கலைந்த முடியை
சீவும் போதெல்லாம்
கலைகிறது மனசு
9.
பாவம்
உன் இமைமுடிக்கும்
புருவங்களுக்கும்
கிட்டவில்லை காதோரம் வந்து
காதல் பேசும் வாய்ப்பு.
10.
உன்
கூந்தல் காடு-என்
உயிரெனும் தண்ணீர்
குடித்து வளர்கிறது.
11.
உன்
கூந்தல் காட்டின்
சிங்கம் நான்.