பிரமையில் பதுங்கும் பூனை

சிரிப்பொலி கேட்டிராத செவிப்பறையின்
பிரதான வாயிலில் துயரத்தின் தடைமுகாம்
மீண்டும் வரியல்களை பூட்டியிருக்கிறது
இதுவரை கண்டிராத பறவையொன்று
நாற்புறமும் வண்டிகள் பூட்டி
நாளாந்த ஜீவிதத்தின் தெருக்களில்
கூர்மிகு வலிகளை சிறகுதிர்த்து செல்கிறது
துக்கத்தின் பெருநிழல் விருட்சங்களாய் வளர
வேர்கொண்டு முகங்களில் படர்கிற
ஊழியின் வலிமை
எங்கள் கண்ணீரைத் தேநீராய் அருந்துகிறது
கடலைக் கால் நடையாகக் கடந்து
ஏதோவொரு அவநம்பிக்கையின் பாசி
வேட்கையின் நிறத்தை மாற்றி
விஷநீரை கக்கி கொண்டிருக்க
பிரமையின் ஆழத்தில் தேய்கிறது புரட்சி
மீள் எழத்துடிக்கும் எழுச்சியுடன்
பலமுறை குண்டுகள் துளைத்த
பேரான்மா குரலெழுப்பி விழிக்கிறது
இறுதிக் கணங்களில் இசைத்த
தாயகக் கனவின் பாடலோடு
உயிரோடு இருக்கும் நானோ
உயிரற்று நடமாடுகிறேன்
சுயநலத்தின் அபரிமிதத்தால்.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (11-Dec-13, 3:48 pm)
பார்வை : 85

மேலே