தமிழன்னை

தொன்மைச் சிறப்புடையாள் தொல்காப்பியப் பேச்சுடையாள்
விண்ணை யளந்திடும் வள்ளுவத்தைச் சூடியவள் !!
கண்ணைக் கவர்ந்திழுக்கும் கால்களிலே காற்சிலம்பும்
பெண்மை ஒளிமுகமும் பெற்ற குமரியவள் !
சிங்காரச் சிற்றிடையில் மேகலையும் ! மாரினிலே
சங்கக் கவிபுனைந்த சிந்தாமணி தாங்கியவள் !
தங்கவளை யாபதி காதுகளில் குண்டலமும்
வங்கத்தின் எல்லைவரை வனப்புகளை ஏந்தியவள் !
அத்தனையும் சீரடியில் வைத்த பேரழகியெனும்
முத்துத் தமிழ்மொழியாம் மூவா இளந்தமிழாம் !
சித்தத்தில் வைத்தவளை நித்தம்நான் வாழ்த்துகிறேன் !
அத்தனையும் சக்தி அருள் !

தமிழுடன்
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Dec-13, 6:44 pm)
Tanglish : thamilannai
பார்வை : 814

மேலே